தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள் சிந்திய ரத்தத்துக்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை என, மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
மே 22, 2018 அன்று, தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகக் கூறி, சுற்றுவட்டாரக் கிராம மக்கள் பலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்போது, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று (மே 22) அனுசரிக்கப்படுகிறது.
இது தொடர்பாக, கனிமொழி இன்று தன் ட்விட்டர் பக்கத்தில், "தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் 2 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய மக்களின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் சுவடுகள் இன்னும் நம் நெஞ்சை விட்டு அகலவில்லை.
'கலவரத்தைக் கட்டுப்படுத்த' எனும் பொய்யைக் கட்டவிழ்த்து போராடிய மக்களின் உயிர் குடித்தது அரசு பயங்கரவாதம். துப்பாக்கிச் சூட்டில் சிந்திய ரத்தத்துக்கான நீதி கிடைத்திருக்கிறதா? இல்லை.
மக்கள் எழுச்சியின் முன் எந்த ஏமாற்று வேலைகளும் எடுபடாது என்பதை இந்த அரசுக்கு உணர்த்திட நாம் உறுதியேற்போம். தூத்துக்குடி போராளிகளுக்கு வீரவணக்கம்" என்று கனிமொழி பதிவிட்டுள்ளார்.