தமிழகம்

கரோனா தொற்று பரிசோதனையில் சென்னை மாநகராட்சி தொடர்ந்து முதலிடம்- இதுவரை 12 ஆயிரம் பேருக்கு பரிசோதனை

செய்திப்பிரிவு

தேசிய அளவில் கரோனா பரிசோதனையில் சென்னை மாநகராட்சி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இங்கு 10 லட்சம் பேரில் 12 ஆயிரத்து 673 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இதற்கு மக்கள் அடர்த்தி மற்றும் அதிக பரிசோதனைகளே காரணம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சென்னையில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் குறித்து அவர்கள் கூறியதாவது:

இந்திய அளவில் சென்னையில்தான் அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. சென்னையில் 10 லட்சம் மக்கள்தொகையில் 12 ஆயிரத்து 673 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தமிழக அளவில் 4 ஆயிரத்து 70 பேர், இந்திய அளவில் 1,821 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்திய அளவில் ஒப்பிடும்போது, சென்னையில் 6 மடங்கு அதிகமாக பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

சென்னையில் 34 வார்டுகளில் 50-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு பகுதியில் உள்ள 127-வது வார்டில் அதிகபட்சமாக 427 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இப்பகுதிகளில் நுண் அளவிலும் ஆய்வுகளை மேற்கொண்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

SCROLL FOR NEXT