கிரிவலப் பாதையில் உள்ள குடியிருப்புப் பகுதியில் உணவுக்காக சாதாரணமாக சுற்றித்திரியும் மயில்கள். படங்கள்: விஎம்.மணிநாதன் 
தமிழகம்

திருவண்ணாமலையில் அதிகரித்துவரும் மயில்கள்; கிரிவலப்பாதை விவசாய நிலங்களில் படையெடுப்பு- பயிர்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் புகார்

வ.செந்தில்குமார்

திருவண்ணாமலையில் மயில்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அவை கிரிவலப் பாதை அருகே உள்ள வயல்களில் பயிர்களை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாககிரிவலப் பாதையில் உள்ள சில ஆசிரமங்களில் கூண்டுகளில் வளர்க்கப்பட்ட மயில்கள் பின்னாளில் சுதந்திரமாக நடமாடத் தொடங்கின. அவை அருகில் உள்ள அண்ணாமலை வனப்பகுதியில் தஞ்சமடைந்ததால் இனப்பெருக்கமும் அதிகரித்தது. அவை விவசாய நிலங்களிலும், 14 கி.மீ கிரிவலப் பாதையிலும் கூட்டமாக சுற்றித்திரிவதை பார்க்க முடிகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் மயில்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் அடி அண்ணாமலை பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பயிர்கள் மற்றும் பூச்செடிகள் சேதப்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

மயில்களுக்காகவே செடி, கொடிகளுக்கு பூச்சி மருந்து அடிப்பதைக் கூட நிறுத்திவிட்டதாக கூறும் விவசாயிகள், பூச்சி மருந்து தெளிக்கப்பட்ட செடிகள், பழங்கள், காய்களை சாப்பிடுவதால் அவற்றுக்கு ஏதாவது ஆபத்து வருமோ என்ற அச்சம் ஏற்படுவதாக கூறுகின்றனர்.

சேகர் என்ற விவசாயி கூறும்போது, ‘‘5 ஏக்கர் நிலத்தில் கேழ்வரகு,கொள்ளு, நெல் பயிரிட்டு வந்தேன். மயில், மான்களின் தொல்லையால் நிலம் இருந்தும் தண்ணீர் வசதி இருந்தும் பயிர் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன். மாடுகளை வளர்த்து குடும்பத்தை நடத்தி வருகிறேன். மயில்களை விரட்ட முடியாததால் 3 ஆண்டுகளாக விவசாயம் செய்யவில்லை’’ என்றார்

அண்ணாமலை காடுகளின் பறவைகள் ஆர்வலர் சிறகன் என்பவர் கூறும்போது, ‘‘1963-ல் இந்தியாவின் தேசிய பறவையாக மயில் அறிவிக்கப்பட்டது. முல்லை நிலங்கள் இல்லாததால் மருத நிலத்துக்கு மயில்கள் வந்துள்ளன. எந்தப் பறவையும் மிளகாயை சாப்பிடாத நிலையில் மயில் மட்டுமே அதை கொத்தி குதறி விட்டுவிடும். மற்ற பறவைகளைப்போல் மயில்களை கட்டுப்படுத்த முடியாது. நிலத்தை மட்டுமே சார்ந்துள்ள மயில்களுக்கான உணவு வனப்பகுதியில் கிடைக்காததால் அருகில் உள்ள நிலங்களுக்கு வருகின்றன. மயில்களால் ஏற்படும் விவசாயிகளின் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை’’ என்றார்.

திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் கிருபா சங்கர் கூறும்போது, ‘‘மயில்களால் பயிர்கள் சேதமடையாமல் இருக்க கோவையில் பின்பற்றப்படும் கயிறு கட்டி வைத்து கட்டுப்படுத்தும் முறை தொடர்பான விவரங்களை கேட்டுள்ளோம். இந்த முயற்சி வெற்றி பெற்றால், அதைத் தொடர்ந்து பயன்படுத்தலாம். இழப்பீடு குறித்து புகார் தெரிவித்தால் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

SCROLL FOR NEXT