கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் மாநில அரசு முழு முயற்சியில் ஈடுபட்டுவரும் நிலையில் தற்போது வெளிமாநிலத்திலிருந்து வருபவர்கள் தொற்றுடன் வருவது சவாலை ஏற்படுத்துவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு காணொலி வாயிலாக பேட்டி அளித்த அவர் கூறியதாவது:
“தமிழகத்தில் இன்று நோய்த்தொற்று எண்ணிக்கை 689 ஆக உள்ளது. சென்னை 557 பேர் தொற்று உள்ளது. பிற நாடுகளிலிருந்து விமானம், ரயில்கள் மூலம் வருபவர்களை மொத்தமாக சோதனைக்கு உட்படுத்துகிறோம். பிற மாநிலங்களிலிருந்து வருபவர்களில் மகாராஷ்டிராவிலிருந்து வந்தவர்களுக்கு இன்று மட்டும் 76 பேர் தொற்று உறுதியாகியுள்ளது, டெல்லி, கேரளா, மேற்கு வங்கம் தலா ஒருவர் என 79 பேரை சேர்த்தால் மொத்த எண்ணிக்கை 776 ஆக உள்ளது. இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட மொத்த சோதனை 12464 .
மொத்த சோதனை 3,72,532 இந்தியாவில் எடுக்கப்பட்ட ஒட்டுமொத்த சோதனையில் 15 சதவீதம் தமிழகத்தில் எடுக்கப்பட்டுள்ளது. ஆய்வக சோதனை மையங்களை அதிகரித்துக்கொண்டே இருக்கிறோம் 66 மொத்த ஆய்வகங்கள் உள்ள நிலையில் அதில் அரசின் ஆய்வகம் 41 தனியார் ஆய்வகம் 25 என்கிற எண்ணிக்கையில் உள்ளது.
இன்று அதிகபட்சமாக 400 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் மொத்தம் இதுவரை 6282 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இன்று 7 பேர் மரணம் அடைந்துள்ளனர் அதில் குறிப்பாக சொல்ல வேண்டியது இந்த மரணங்களில் வயது முக்கிய பங்காக உள்ளது. 52, 56, 60 என அதிக வயது, அதேபோல் நீரிழிவு நோயாளிகள் 4 பேரும், 2 பேருக்கு நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் ஒருவர் கிட்னி டயாலசிஸ் சிகிச்சையில் உள்ளவர். இறந்தவர்களில் 3 பேர் அரசு மருத்துவமனையிலும், 4 பேர் தனியார் மருத்துவமனையிலும் இறந்துள்ளனர்.
ஈரோடு திருப்பூர், கோவை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நோய்ப்பரவலின் அனைத்து மட்டங்களையும் கட்டுபடுத்தி தொற்றுப் பரவலை தடுத்துள்ளோம். இம்மாவட்டங்களில் கண்காணிப்புப் பகுதிகளே இல்லை. ஆனால் இம்மாவட்டங்களில் வருபவர்கள் செக் போஸ்ட்டில் சோதனை நடத்தி அவர்களை தனிமைப்படுத்துகிறோம்.
வருபவர்கள் நமது மண்ணைச் சார்ந்தவர்கள், நம் சகோதரரர்கள் அவர்கள் வருவதை நாம் வரவேற்கிறோம். அவர்கள் மூலம் நோய்ப்பரவல் வரக்கூடாது என்பதற்காக சோதனைச் சாவடியிலேயே தனிமைப்படுத்துகிறோம்.
இதுவரை 10 விமானங்களில் 2139 பேர் வந்துள்ளனர். அதில் 13 பேருக்கு தொற்று. இதில் மிகப்பெரிய சவால் என்னவென்றால் இதில் சோதனையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீடு செல்லும்போது 7 நாட்கள் கழித்து ஒரு சோதனை செய்தபோது அதில் நோய்த்தொற்று இல்லாதவர்கள் 25 பேருக்கு மீண்டும் பாஸிட்டிவாக உள்ளது.
இது ஒரு புதிய சவால். ஏற்கெனவே அவர்களுக்கு தொற்று இல்லை நன்றாக இருக்கிறார்கள், அவர்களை வீட்டுக்கு அனுப்ப சோதனை நடத்தும்போது பாஸிட்டிவாக வருகிறது. அதேப்போன்று 4 ரயில்கள் டெல்லி, புனேவிலிருந்து வந்துள்ளது அதில் மொத்தமாக 3891 பேரில் 3 பேருக்கு பாஸிட்டிவ். இந்திய விமானப்படை விமானம் மூலம் 128 பேரை கொண்டு வந்து தனிமைப்படுத்தி வைத்துள்ளதில் அதில் ஒரே விமானத்தில் வந்த 28 பேருக்கு பாஸிட்டிவ். குறிப்பாக மஹாராஷ்டிரா மாநிலத்திலிருந்து வருபவர்கள் மூலம் அதிக தொற்றுள்ளவர்கள் வருகின்ரனர்.
இவ்வாறு பல்வேறு சவால்களுக்கிடையேதான் நமக்கு எண்ணிக்கை உயர்கிறது. பல்வேறு மருத்துவக்குழுக்களை முதல்வர் அமைத்துள்ளார். அவர்கள் என்ன விதிமுறைகள், வழிமுறைகள், அறிவுரை , ஆலோசனைகளை ஏற்று சோதனை முறைகளை வகுத்து வருகிறோம். மரணவிகிதத்தைப் பொருத்தவரை இந்தியாவிலேயே குறைந்த அளவில் நாம் பராமரித்து வருகிறோம். .69 சதவீதமாக உள்ளது.
12 உயர் மட்டக்குழுக்கள் அமைத்துள்ளோம் அதில் சிறு நீரகம், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், மன நலம், குழந்தைகள் நலம், கர்ப்பிணிகள், காச நோய், எச் ஐவி, வயது மூப்பு, இதய நோய் ஆகிய சிகிச்சைகளுக்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நோயாளிகளுக்கான உணவு , சிகிச்சை முறை ஆகிவற்றின்மூலம் அவர்களை கண்ணுங்கருத்துமாக உரிய வழிகாட்டுதல்படி சிகிச்சை அளித்து மரண விகிதத்தை குறைக்க முயற்சி செய்கிறோம்.
சென்னையைப்பொருத்தவரை ராஜீவ் காந்தி, ஓமந்தூரார், கீழ்ப்பாக்கம், கிண்டி, அயனாவரம், பாரதி சாலை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் சோதனைகள் நடத்தப்படுகிறது. மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அல்லாமல் கூடுதலாக மருத்துவமனைகளில் நடமாடும் ஆய்வகம், எக்ஸ்ரே கருவிகள் அமைத்து ஆய்வுகளை அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களின் ஒத்துழைப்பு, பங்களிப்போடு உலகையே அச்சுருத்திக்கொண்டிருக்கிற இந்த கரோனாவை கட்டுப்படுத்த முயற்சி எடுப்போம் என்று தெரிவித்துக்கொள்கிறேன்”.
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.