கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மருத்துவர் பற்றாக்குறையை நீக்க எடுக்கப்படும் நடவடிக்கை, அதிக அளவில் சோதனைகள் செய்வது, பொதுமக்களைக் காக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து முதல்வர் பழனிசாமிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால்கிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதம்:
''கரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு 50 நாட்களுக்கும் மேலாக நீடித்து வருவதுடன் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நோய்ப் பரவலைத் தடுப்பதற்கும், ஊரடங்கின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களது கோரிக்கைகளையும் தங்களது கவனத்திற்குக் கொண்டு வருவதுடன் அவற்றை நிறைவேற்றித் தர வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.
நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. அடுத்து வரும் காலங்களில் இந்நோய்த் தொற்று உச்சத்திற்குச் செல்லும் என அறிய முடிகிறது. மருத்துவ சிகிச்சையில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் கரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகி தற்போது மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதனால், நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது குறித்து அரசு ஆலோசிப்பதாகத் தெரிய வருகிறது. இத்தகைய நிலைமைகள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அ) இவற்றை எதிர்கொள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளையும், தனியார் மருத்துவக் கல்லுரி மருத்துவமனைகளையும் கரோனா சிகிச்சைக்கு அரசு பயன்படுத்த வேண்டும்.
ஆ) நோய்த் தொற்று அறிகுறி உள்ளவர்கள் மற்றும் உறுதி செய்யப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்து உரிய சிகிச்சை அளித்திட வேண்டும்.
இ) தொற்று அறிகுறி இல்லாதவர்கள் மத்தியிலும் ரேண்டம் டெஸ்ட்டிங் நடத்திட வேண்டும்.
ஈ) தனியார் ஆய்வகங்களில் ஏற்படும் சோதனைச் செலவுகளை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும். இதனால் மக்கள் தானே முன்வந்து சோதனை செய்து கொள்ள வாய்ப்பு ஏற்படும்.
உ) முகக்கவசம் கட்டாயம் என்ற சூழ்நிலையில் அனைவருக்கும் அல்லது குறைந்தபட்சம் ஏழை - எளிய மக்களுக்கு அரசே இலவசமாக முகக்கவசம் மற்றும் கை கழுவும் சானிடைசர் வழங்க வேண்டும்.
ஊ) தனியார் மருந்தகங்களில் விற்கப்படும் அனைத்து மருத்துவ உபகரணங்களுக்கும் அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
எ) அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு அரசு அறிவித்த சலுகைகள் இதுவரை வழங்கப்படவில்லை. உதாரணமாக ஒரு மாதக் கூடுதல் ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. எனவே, இவர்கள் அனைவருக்கும் கூடுதல் ஊதியம் மற்றும் பொருளாதாரப் பயன்களை வழங்கிட வேண்டும்.
ஏ) ஏற்கெனவே 2015-ம் ஆண்டு பணியில் அமர்த்தப்பட்ட 8000க்கும் மேற்பட்ட செவிலியர்களையும், தற்போது பணியமர்த்தப்பட்டுள்ள செவிலியர்களையும், இனி புதிதாக பணியமர்த்தப்படவுள்ள செவிலியர்களையும் பணி நிரந்தம் செய்து, காலமுறை ஊதியம் வழங்கி வேண்டும்.
ஐ) தற்போது சென்னையில் மருத்துவர்கள் போதாமை உள்ளதால் ஏற்கெனவே நடைபெற்ற போராட்டத்தின் காரணமாக வெளியூர்களுக்கு மாற்றப்பட்ட மருத்துவர்களை சென்னையிலுள்ள மருத்துவமனைகளில் மீண்டும் பணியமர்த்திட வேண்டும்.
ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும்
1. மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்றுள்ள நுண் நிதி நிறுவனக் கடன்கள், வாகனக் கடன்கள், வீடு கட்ட வாங்கியுள்ள கடன்கள் போன்ற அனைவரது கடன் வசூலையும் ஓராண்டுக்கு ஒத்திவைக்க வேண்டுமெனவும், இக்காலத்துக்கான வட்டியையும் தள்ளுபடி செய்ய வேண்டுமென மத்திய அரசிடம் தமிழக அரசு வற்புறுத்திட வேண்டும்.
2. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டப் பணிகள் தமிழகத்தின் பல பகுதிகளில் இன்னும் தொடங்கப்படவில்லை. அனைத்துக் கிராம ஊராட்சிகளிலும் இத்திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்திடவும், பேரூராட்சிகளுக்கு இதனை விரிவுபடுத்தவும் வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.
a. மேலும், தாங்கள் மத்திய அரசிடம் கோரியுள்ளதைப் போல இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியத்தை வங்கிகள் மூலம் வழங்காமல் பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கிட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
2. நகர்ப்புறங்களில் உள்ள ஏழை, எளிய தொழிலாளர்களுக்கும் வேலையும், வருமானமும் கிடைத்திட நகர்ப்புறங்களில் நகர்ப்புற வேலை உறுதிச் சட்டம் உடனடியாக இயற்றி ஊரடங்கு காலத்தில் செயல்படுத்திட வேண்டும்.
3. புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சினை பூதாகாரமாக உள்ளது. அவர்களைச் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதில் மத்திய, மாநில அரசுகள் கடைப்பிடிக்கும் அலட்சியப் போக்குகள் அத்தொழிலாளர்களை ஆழ்ந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது. நேற்று ஒருவர் திருவள்ளூரில் உயிரிழந்துள்ளார். எனவே, தமிழகத்திலிருந்து புறப்படும் அனைத்து ரயில்களையும் இயக்கி இத்தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
4. தமிழகத்தில் ஆட்டோ போக்குவரத்துக்கு அனுமதிக்க வேண்டும். நலவாரியத்தில் பதிந்த மற்றும் பதிய முடியாத அனைத்து ஆட்டோ தொழிலாளர்களுக்கும் நிவாரணம் அறிவித்திட வேண்டும்.
5. அனைத்து வாகனங்களுக்கான நடப்புக் காலாண்டு சாலை வரியினை ரத்து செய்ய வேண்டும்.
6. ஊரடங்கின்போது சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்ய முடியாமல் அழிந்துபோன பழங்கள், காய்கறிகள், மலர்கள், வெற்றிலை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு உரிய நட்ட ஈடு வழங்கிட வேண்டும். அதற்கான கணக்கெடுப்புப் பணிகளை உடன் தொடங்கிட உத்திரவிட வேண்டும்.
7. கடந்த இரண்டு மாதங்களாக தமிழகத்தில் இ-சேவை மையங்கள் எதுவும் செயல்படவில்லை. உடனடியாக அனைத்து இ-சேவை மையங்களும் செயல்பட நடவடிக்கை எடுத்திட வேண்டும்
8. இதுவரை நிவாரணம் அறிவிக்கப்படாத மாற்றுத்திறனாளிகள், தையல் கலைஞர்கள் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் உட்பட இதுவரை நிவாரணம் கிடைக்காத பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் உடனடியாக நிவாரணங்கள் அறிவிக்கப்பட வேண்டும்''.
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.