கொடைக்கானல் பிரையண்ட்பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர்களை கண்டு ரசித்த நகராட்சி தூய்மை பணியாளர்கள். 
தமிழகம்

கொடைக்கானல் பூங்காவில் மலர்களைக் கண்டுரசித்த தூய்மைப் பணியாளர்கள்: கரோனா பணியில் ஈடுபட்டவர்களை கவுரவித்த தோட்டக்கலைத்துறை

பி.டி.ரவிச்சந்திரன்

கரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள துப்புரவுப் பணியாளர்களை கவுரவப்படுத்தும் விதமாக கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர்களை காண தோட்டக்கலைத் துறையினர் ஏற்பாடுகள் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஆண்டுதோறும் மே மாத இறுதியில்கோடை விழாவை முன்னிட்டு மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு மலர்கண்காட்சிக்காக கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே மலர்செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிப்புப் பணிகள் நடந்துவந்தது. கரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சுற்றுலாபயணிகள் வருகை முற்றிலும் இல்லை.

கோடைவிழா, மலர் கண்காட்சி ஆகியவையும் நடைபெறவில்லை. மலர்கண்காட்சிக்கு தயாரான மலர்கள் தற்போது பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்குகின்றன.

இந்நிலையில் கரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக தோட்டக்கலைத்துறையினர் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர்களைகாண இன்று அழைத்துவரப்பட்டனர்.

பூங்காவிற்கு வருகை தந்த கொடைக்கானல் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மலர்கொத்து வழங்கி வரவேற்பளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கொடைக்கானல் கோட்டாட்சியர் சிவக்குமார், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தூய்மை பணியாளர்களை வரவேற்றனர்.

தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் சமூக இடைவெளியுடன் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர்களை கண்டுரசித்தனர்.

தொடர்ந்து மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட கரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுவருபவர்களை கவுரவிக்கும்விதமாக அடுத்தடுத்த நாட்களில் அழைத்துவரப்பட்டு பூங்காவில் பூத்துள்ள மலர்களை காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT