ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து பிஹார் மாநில தொழிலாளர்கள் 458 பேர் சிறப்பு ரயிலில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கரோனா ஊரடங்கால் புலம் பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் தங்கி பல்வேறு பணிகளில் ஈடுபட்ட பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், மதரஸாக்களில் மார்க்க கல்வி பயின்ற இஸ்லாமிய சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட 456 பேர் மற்றும் 2 குழந்தைகள் என 458 பேர் இன்று ராமநாதபுரத்திலிருந்து சிறப்பு ரயிலில் பிஹார் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பகல் 1.10 மணிக்கு இந்த ரயில் புறப்பட்டுச் சென்றது, 24 பெட்டிகள் கொண்ட இந்த சிறப்பு ரயிலில் 458 பேரும், மதுரை ரயில் நிலையத்திலிருந்து 1134 பேரும் பிஹார் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் பிஹார் மாநில தொழிலாளர்களுக்கு உணவு, பழம், பிஸ்கட், தண்ணீர் உள்ளிட்டவைகளை வழங்கி அனுப்பி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் சரக டிஐஜி ரூபேஸ் குமார் மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, சார் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா, ரயில்வே பாதுகாப்பு படை கமாண்டண்ட் அன்பரசு, ரயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக தொழிலாளர்கள் அனைவருக்கம் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கீழக்கரையில் இருந்து வந்த 15 பேருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தது. அவர்களை முழு பரிசோதனைக்கு பின் அனுப்பப்பட்டனர்.
இதுகுறித்து ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் கூறும்போது, மாவட்டத்தில் 3174 வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளதாக பதிவு செய்துள்ளனர். இதில் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல விருப்பமுள்ள 1823 பேர் பதிவு செய்தனர். இவர்களில் முதற்கட்டாக பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த 458 சிறப்பு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.