பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

கைத்துப்பாக்கியைக் காட்டி தொழிலதிபருக்கு கொலை மிரட்டல்: ஒருவர் கைது; முக்கிய நபர் தலைமறைவு

பெ.ஸ்ரீனிவாசன்

திருப்பூரில் பண விவகாரத்தில் கைத்துப்பாக்கியைக் காட்டி தொழிலதிபரை மிரட்டிய நபரை போலீஸார் தேடி வருகின்றனர். மிரட்டிய நபரின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் பழவஞ்சிபாளையம் பிரிவு பகுதியில் ஹாலோபிளாக் உற்பத்தி மற்றும் விற்பனை மையம் நடத்தி வருபவர் சந்திரன் (48). கடந்த 2018-ம் ஆண்டு பல்லடம் பகுதியில் 4 ஏக்கர் நிலத்தை ரூ.6 கோடிக்கு விலை பேசி வாங்க முற்பட்டுள்ளார். அந்த நிலத்தில் 30 சென்ட் இடம் சிக்கலில் இருந்ததாகத் தெரிகிறது.

இதனால் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு, நிலத்தை வாங்கித் தருமாறு திருப்பூர் அரண்மனைபுதூரைச் சேர்ந்த சந்திரசேகர் (55) என்பவரை அணுகியுள்ளார். இப்பணியைச் செய்து முடித்தால் சந்திரசேகருக்கு ரூ.70 லட்சம் பணம் தனியாக தருவதாக சந்திரன் தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, அந்த 30 சென்ட் நிலத்தின் மீது உள்ள பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியில் சந்திரசேகர் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டு, நீதிமன்ற உத்தரவுடன் நிலத்தை தனது தரப்பினர் பெயரில் கிரயம் செய்துள்ளார்.

பேசியபடி இவ்விவகாரத்தில் தனக்கு உதவியாக செயல்பட்ட சந்திரசேகருக்கு 4 தவணைகளில் இதுவரை சந்திரன் தரப்பிலிருந்து ரூ.58 லட்சம் பணம் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில், மீதத் தொகை ரூ.12 லட்சத்தை அளிக்குமாறு நேற்று (மே 20) சந்திரசேகர் பழவஞ்சிபாளையம் சென்று சந்திரனைக் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே பண விவகாரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றவே, திடீரென சந்திரசேகர் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து சந்திரனை மிரட்டி, பணத்தை விரைவில் தருமாறு கூறி, பிறகு தனது ஆட்களுடன் அங்கிருந்து சென்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக நேற்று இரவு சந்திரன் வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சந்திரசேகரைத் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ''இவ்விவகாரம் தொடர்பாக சந்திரசேகரின் உதவியாளர் மணிகண்டன் (45) என்பவரைக் கைது செய்துள்ளோம். தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது'' என்றனர். மாநகர காவல் துணை ஆணையர் வி.பத்ரி நாராயணன் கூறும்போது, ''சந்திரசேகர் வைத்துள்ள துப்பாக்கியானது உரிமம் பெறப்பட்டது. இருப்பினும் அதை அவர் துஷ்பிரயோகம் செய்துள்ளார். தலைமறைவாக உள்ள சந்திரசேகரைத் தேடி வருகிறோம்'' என்றார்.

SCROLL FOR NEXT