‘‘ஸ்டாலின் சுய விளம்பரத்துக்காகவே மக்களுக்கு உதவி செய்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார், ’’ என்று வி.வி ராஜன் செல்லப்பா எம்எல்ஏ பேசினார்.
மதுரை புறநகர் பகுதியில் அமைந்துள்ள திருப்பாலை, அய்யர் பங்களா உள்ளிட்ட பகுதிகளில் 2,000 க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு அரிசி, பருப்பு, பலசரக்கு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் எஸ்.ஜீவானந்தம், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வி.வி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ பேசியதாவது:
தமிழக மக்களுக்கு தேவையான உதவிகளை மக்களுக்கு முதலமைச்சர் பல்வேறு வகையில் செய்து வருகிறார். ஆனால், ஸ்டாலின் மக்கள் தன்னை மறந்து விடுவார்கள் என்றார் சுய விளம்பரத்துக்காகவே மக்களுக்கு உதவி செய்வது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்.
தி.மு.க.வினருக்கு மக்கள் உதவி கேட்டு 15 லட்சம் தொலைபேசி அழைப்புகள் வந்தது என்ற புள்ளி விபரம் உண்மையானது அல்ல. ‘கரோனா’ தடுப்பு செயல்பாட்டில் தமிழகத்தை செயல்பாட்டை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமே பாராட்டியுள்ளது.
விரைவில் தமிழகத்தை கொரோனா இல்லாத பகுதியாக உருவாக்கி தமிழகம் பச்சை மண்டலமாக இருக்கிறது என்ற நிலையை முதலமைச்சர் உருவாக்குவார்.
இவ்வாறு அவர் பேசினார்.