கி.வீரமணி: கோப்புப்படம் 
தமிழகம்

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்புத் தகுதி: 69% இட ஒதுக்கீட்டுக்கு உத்தரவாதம் வேண்டும்; கி.வீரமணி

செய்திப்பிரிவு

69 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு உத்தரவாதம் அளித்தால் மட்டுமே அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்புத் தகுதி வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, கி.வீரமணி இன்று (மே 21) வெளியிட்ட அறிக்கை:

"அண்ணா பல்கலைக்கழகத்துக்கு (சென்னை) சிறப்புத் தகுதி வழங்குவது குறித்து ஆலோசிக்க கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகிய அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. மேலும், நிதி, சட்டம், உயர்கல்வித் துறை செயலாளர்களும் இக்குழுவில் உள்ளனர்.

இக்குழுவினர் நேற்று (மே 20) ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தியுள்ளனர்.

அதில் அவர்கள் முடிவு எடுத்துள்ளதாக வெளிவந்துள்ள செய்திப்படி, அண்ணா பல்கலைக்கழக சிறப்புத் தகுதியை மத்திய அரசு அளிக்கும் திட்டத்திற்கு, ஒரு முக்கிய நிபந்தனையின் பேரில் மட்டுமே ஒப்புதல் அளிக்க முடியும், அதாவது, 69 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு உத்தரவாதம் அளிக்காத பட்சத்தில், இதனை நிராகரிப்பது என்ற முடிவு மிகவும் வரவேற்கத்தக்கது.

தமிழக அரசும், அமைச்சர்களும் இதில் எந்தவித சமரசத்திற்கும் இடம் தராமல் 69 சதவிகித இட ஒதுக்கீடு தொடரும் என்ற உத்தரவாதம், ஆணையின் மூலம் உறுதி செய்யப்பட்ட பிறகே, தனது ஒப்புதலை வழங்குவதில் மிகுந்த விழிப்புடன் செயலாற்ற வேண்டும்".

இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT