தமிழகம்

ஜூன் 1-ம் தேதி முதல் 200 விரைவு ரயில்கள் இயக்கம் - விரைவில் முன்பதிவு தொடக்கம்

செய்திப்பிரிவு

நாடுமுழுவதும் பல்வேறு இடங்களுக்கு ஜூன் 1 முதல் 200 விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் கடந்த 12-ம் தேதிமுதல் 15 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல், 200 விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

வழித்தடம் விரைவில் அறிவிப்பு

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால், நாடுமுழுவதும் வரும் ஜூன் 1 முதல் ஏசி அல்லாத 200 விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்கள் இயக்கப்படும் வழித்தடங்கள் குறித்த விவரம் ஓரிரு நாளில் வெளியாகும். அதன்பிறகு, ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கும்’’ என்றனர்.

ராஜ்தானி சிறப்பு ரயில் இயக்கம்

இதற்கிடையே, புதுடெல்லி - சென்னை இடையே மே 21 (இன்று) முதல் ராஜ்தானி சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுடெல்லியில் இருந்து ராஜ்தானி சிறப்பு ரயில், மே 21 முதல் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் மாலை 4 மணிக்கு புறப்பட்டு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இரவு 8.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

மறுமார்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து புதுடெல்லிக்கு புதன், சனிக்கிழமைகளில் காலை 6.35 மணிக்கு இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில்களுக்கானமுன்பதிவு ஐஆர்சிடிசி இணையதளத்தில் தொடங்கியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT