ஊரடங்கின்போது, விநியோகிக்கும் நிவாரணப் பொருட்களால் அதிமுக, திமுகவின் செல்வாக்கு மக்களிடம் அதிகரிக்கிறதா என, தமிழக உளவுத்துறை தகவல் சேகரிக்கிறது.
தமிழகத்தில் கரோனா தடுப்புக்கான பொது ஊரடங்கு முதலில் மார்ச் 24 - ஏப்ரல் 17 வரை அமல்படுத்தப்பட்டது. இதன்பின், மே 3, மே 17 வரை என, அடுத்தடுத்து நீடிக்கப்பட்டு, தற்போது 4-ம்கட்டமாக மே 31 வரையிலும் அமலில் உள்ளது.
இச்சூழலில், தமிழக அரசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மற்றும் 3 மாதத்திற்கான இலவச ரேசன் பொருட்களை வழங்குகிறது. அமைப்பு சாரா தொழிலாளர்கள், வாரிய தொழிலாளர்கள் உட்பட சிரம்மப்படுவோருக்கு அரசு உதவிகள் செய்கிறது.
ஒவ்வொரு தொகுதியிலும் ஆளுங்கட்சி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எதிர்க்கட்சியினர், பொதுநல அமைப்புகள் ,ரோட்டரி கிளப்புகள், தனிநபர்கள், குறிப்பாக காவல்துறையினர், என, பல்வேறு தரப்பினரும் முடிந்தரை அரிசு. பருப்பு, காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்கள், நோய் தடுப்புச் சாதனங்களை வழங்குகின்றனர்.
இதற்கிடையில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பொதுநல அமைப்புகள், தனிநபர்கள் என, யாராக இருந்தாலும், அந்த மாவட்ட நிர்வாகத்திடம் நிவாரணப் பொருட் களை ஒப்படைத்து மக்களுக்கு விநியோகிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையிலும் உரிய அனுமதியை பெற்று எதிர்க்கட்சியினர், தனியார் அமைப்பினர் ஊரடங்கால் பாதித்த மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்கின்றனர். ஊரடங்கு நேரத்தில் நிவாரணப் பொருட் களை விநியோகித்து இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள், பொதுமக்களிடம் செல்வாக்கு பெற்றிடக்கூடாது என, அதிமுக அரசு தடை ஏற்படுத்துவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், ஊரடங்கு நேரத்தில் தமிழகத்தில் ஆளுங்கட்சி, எதிர்கட்சியினர் பொது மக்களுக்கு வழங்கும் நிவாரணப் பொருட்கள் விநியோகம் வரவேற்பபை பெறுகிறதா என்ற கோணத்தில் ஆய்வு செய்கின்றனர்.
இருப்பினும், ஊரடங்கு நீடிப்பதாலும், 2021-ம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் நெருங் குவதாலும் நிவாரணப் பொருட்கள் விநியோகத்தால் திமுக, காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள் மக்களிடம் செல்வாக்கை பெற நெருங்கிறதா என,சந்தேகிக்கும் ஆளுங்கட்சி இது தொடர்பாக மாவட்டம் வாரியாக கருத்துச் சேகரிக்க, உளவுத்துறைக்கு அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உளவுத்துறையின் கூறுகையில், ‘‘தேர்தல் மற்றும் பேரிடர் காலத்தில் அரசு மீதான மக்கள் நம்பிக்கை குறித்து ஆய்வு செய்வது வழக்கம். ஊரடங்கு தொடரும் சூழலில் அந்தந்த தொகுதியில் ஆளுங்கட்சியினரும், எதிர்கட்சியினரும் டோக்கன் வழங்கி நிவாரணப்பொருட்களை வழங்குகின்றன. மனிதாபிமானமா, அரசியல் நோக்கமா அல்லது தேர்தல் எதிர்பார்ப்பா என்ற வகையில் ஆய்வு செய்கிறோம்.
இம்முயற்சி மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுகிறதா. யாருக்கு செல்வாக்கு அதிகரிக்கிறது என்ற அடிப்படையிலும் பார்க்கிறோம். ஊரடங்கு நேரத்தில் ஏற்கெனவே அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ஆளுங் கட்சியினர் செயல்பாடு குறித்தும் தகவல் சேகரித்து, கட்சியின் தலைமைக்கு அனுப்பி உள்ளோம்,’’ என்றனர்.