அமெரிக்க நாட்டில் சிக்கிக்கொண்டவர்கள் கூட வேகமாக மீட்கப்பட்டுவிட்டார்கள். ஆனால், பக்கத்து நாடான இலங்கையில் சிக்கிய 2000 இந்தியர்கள் இதுவரையில் மீட்கப்படவில்லை. இந்தப் பிரச்சினை பற்றி மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
’‘கரோனா பாதிப்பால் இலங்கையிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலிருந்து அந்நாட்டிற்குச் சுற்றுலாப் பயணிகளாகச் சென்ற சுமார் 2000 இந்தியர்கள் உணவு மற்றும் மருத்துவ உதவி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். தங்களிடம் இருந்த சேமிப்புகள் அனைத்தையும் இழந்து இலங்கையில் சிக்கி நிர்க்கதியான நிலையில் வாழ்ந்து வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தக் கொடுமையால் ஒருகட்டத்தில் நாங்கள் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறுவழியில்லை என்று அதில் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அமெரிக்கா போன்ற தொலைதூரத்து நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டுவரும் மத்திய அரசு, அருகில் உள்ள இலங்கையில் தவிக்கும் இந்தியர்களை மீட்க முன்வராதது வேதனைக்குரியது. எனவே, இலங்கையில் கரோனா ஊரடங்கு பிரச்சினையில் சிக்கி இருக்கும் இந்தியர்களை பத்திரமாக மீட்டு இந்தியா கொண்டுவர மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.’’
இவ்வாறு ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.