திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து வடமாநிலத் தொழிலாளர்கள் 1600 பேர் இன்று சிறப்பு ரயில் மூலம் திண்டுக்கல்லில் இருந்து பிஹார் மாநிலத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் கோழிப்பண்ணைகள், பஞ்சாலைகள், ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட பல தொழில் நிறுவனங்களில் மொத்தம் 9000 வடமாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிந்துவந்தனர்.
ஊரடங்கு காரணமாக தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால் இவர்கள் வேலையின்றி சிரமப்பட்டு வந்த நிலையில், சொந்த ஊருக்குச் செல்ல விரும்பினர்.
இதற்காக திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்து வைத்தனர். முதற்கட்டமாக உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 120 தொழிலாளர்கள் இருதினங்களுக்கு முன்பு மதுரையில் இருந்த உத்தரப்பிரதேசத்திற்க புறப்பட்டுச்சென்ற ரயிலில் அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதையடுத்து நேற்று பீகார் மாநிலத்திற்கு திண்டுக்கல்லில் இருந்து பகல் 2 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது. இதில் பழநி பகுதியைச் சேர்ந்த 706 பேர் உட்பட திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 1269 பேர் மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த பிஹார் மாநிலத் தொழிலாளர்கள் என மொத்தம் 1600 பேர் சிறப்பு ரயிலில் அனுப்பிவைக்கப்பட்டனர்.
அனைவருக்கு மருத்துவபரிசோதனை செய்யப்பட்டு உணவு, தண்ணீர் ஆகியவை வழங்கப்பட்டு சிறப்பு ரயிலில் அனுப்பிவைக்கும் பணியில் வருவாய்த்துறையினர், சுகாதாரத்துறையினர், போலீஸார் ஈடுபட்டனர்.