தமிழகம்

மும்பையில் இருந்து கோவில்பட்டிக்கு வந்த 3 மாத குழந்தை உட்பட 13 பேருக்கு கரோனா

எஸ்.கோமதி விநாயகம்

மும்பையிலிருந்து கோவில்பட்டிக்கு வந்த 3 மாத குழந்தை உட்பட 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

வெளிமாநிலங்களில் வசித்து வரும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் அங்கு இருந்து பேருந்துகள் மூலம் அழைத்து வரப்பட்டு கோவில்பட்டி, எட்டயபுரம், வேம்பாரில் உள்ள கல்லூரிகளில் கல்லூரிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட அறையில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த 17-ம் தேதி மும்பையில் இருந்து வந்து கோவில்பட்டி கல்லூரியில் தங்க வைக்கப்பட்டிருந்த கயத்தாறைச் சேர்ந்த 47, 26 வயது பெண்கள், 24 வயது ஆண், 2 வயது ஆண் குழந்தை மற்றும் 3 மாத பெண் குழந்தை ஆகிய 5 பேருக்கு இன்று காலை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், மும்பையிலிருந்து வந்த ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த 40, 11 வயதுடைய ஆண்கள், 42 வயது பெண் ஆகிய 3 பேருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இவர்கள் 8 பேரும் பலத்த பாதுகாப்புடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

துப்புரவு பணியாளருக்கு கரோனா

கோவில்பட்டி ஸ்டாலின் காலனியைச் சேர்ந்த 55 வயது பெண் நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு நேற்று முன்தினம் காலை காய்ச்சல் இருந்ததால் உடனடியாக இங்குள்ள நகர் நல மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவருக்கு மருத்துவ குழுவினர் உடனடியாக சளி மற்றும் ரத்த மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பினர். இதில் நேற்று அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதேபோல் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் கடந்த 17-ம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த மும்பை மாநிலம் தாராவியில் இருந்து வந்த சாத்தான்குளத்தைச் சேர்ந்த 30 வயது இளைஞருக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் தனித்தனி 108 ஆம்புலன்சில் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதேபோல் கோவில்பட்டி கல்லூரியில் தங்க வைக்கப்பட்டிருந்த முறப்பநாட்டைச் சேர்ந்த 45 வயது பெண்ணுக்கும், எட்டயபுரம் பாலிடெக்னிக்கில் தங்கி இருந்த மும்பையிலிருந்து கடந்த 16-ம் தேதி வந்த திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த 44, 28 வயது சகோதரர்களுக்கும் கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT