தமிழகம்

நாகர்கோவிலில் கரோனாவினால் குணமடைந்தோர் வசித்த பகுதியை தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கக்கோரி பொதுமக்கள் போராட்டம்: போலீஸ் குவிப்பு

எல்.மோகன்

குமரி மாவட்டம் வெட்டூர்ணிமடம் அருகே தனிமைப்படுத்துதலில் இருந்து நீக்கக் கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

நாகர்கோவிலில் வெட்டூர்ணிமடம் சந்தோஷ் நகர் பகுதியில் சென்னையில் இருந்து வந்த ஒரு நபருக்கு கரோன பாதிப்பு இருந்தது.

இதைத்தொடர்ந்து அவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேலும் அவர் தங்கியிருந்த சந்தோஷ் நகர் பகுதி தனிமைப் படுத்தப்பட்டது.

இவருடன் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் வீடு திரும்பினர். இதனைத் தொடர்ந்து அவர்கள் தங்கியிருந்த பகுதியான சுங்கான்கடை, விரிகோடு உள்ளிட்ட பகுதிகள் தனிமைப்படுத்துதலில் இருந்து நீக்கப்பட்டு தடுப்புகள் அகற்றப்பட்டன.

அதே நேரத்தில் சந்தோஷ் நகர் பகுதியில் உள்ள தடுப்புகள் அகற்றப்படவில்லை. சந்தோஷநகர் பகுதி மக்கள் தங்களை தனிமைப்படுத்துதலில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அப்பகுதி மக்கள் தங்கள் பகுதிகளில் தடுப்பை நீக்கக்கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது திடீரென இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT