கூடங்குளத்தில் 2-வது அணுஉலை தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்வதற்காக ரஷ்ய தொழில்நுட்ப வல்லுநர்கள் தனிவிமானத்தில் வருகை தந்துள்ளனர்.
கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறனுள்ள 2 அணுஉலைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில் 2-வது அணுஉலையில் ஜெனரேட்டர் பகுதியில் தேவையற்ற அதிர்வுகள் ஏற்படுவதால் முழுஅளவில் மின்உற்பத்தி மேற்கொள்ளப்படாமல் இருந்துவந்தது.
இந்த கோளாறை சரிசெய்ய முயன்றும் முடியாமல் இருந்துவந்ததாக தெரிகிறது. இந்த தொழில்நுட்ப கோளாறு குறித்து இந்திய அணுசக்தி கழக உயர் அதிகாரிகள் ரஷ்ய விஞ்ஞானிகளுக்கு தெரிவித்தனர்.
இந்திய- ரஷ்ய ஒப்பந்தப்படி இந்த தொழில் நுட்ப கோளாறை சரிசெய்ய ரஷ்ய அணுசக்தி விஞ்ஞானிகள் ஒப்புக்கொண்டனர்.
இதை தொடர்ந்து ரஷ்யாவிலிருந்து அகமதாபாத்துக்கு 7 பேர் கொண்ட தொழில்நுட்ப வல்லுநர் குழு விமானத்தில் வந்தது. அக் குழுவினர் அங்கிருந்து தனி விமானத்தில் இன்று பகல் 11.30 மணியளவில் மதுரைக்கு வந்தனர்.
அங்கிருந்து காரில் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு வந்துள்ள இந்த வல்லுநர்கள் குழு வரும் ஜூன் 2-ம் தேதி வரை இங்கிருந்து தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்துவிட்டு ரஷ்யாவுக்கு திரும்பி செல்லும் என்று அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.