வைகோ: கோப்புப்படம் 
தமிழகம்

தமிழகத்தைச் சேர்ந்தவர் ஓமனில் உயிரிழப்பு: இறந்தவரின் உடல் வைகோ முயற்சியால் தமிழகம் வருகிறது

செய்திப்பிரிவு

ஓமனில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தவரின் உடல், மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோவின் முயற்சியால் தமிழகம் வந்தடைய உள்ளது.

இது தொடர்பாக, மதிமுக இன்று (மே 20) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"தென்காசி மாவட்டம், திருவேங்கடம் வட்டம், குளக்கட்டாகுறிச்சி கிராமத்தில், ஏழ்மையான ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த சாமுவேல் இளங்கோவன் கடந்த மே 11 ஆம் தேதி ஓமன் சலாலாவில் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார்.

உயிரிழந்த இளங்கோவன்

இவரது உடலைக் கொண்டு வர உதவுமாறு, இவரது மருமகன் மணிகண்டன், தென்காசி மதிமுக மாவட்டச் செயலாளர் தி.மு.ராஜேந்திரன் மூலம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவைத் தொடர்புகொண்டு கோரிக்கை வைத்தார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. உடனடியாக வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அவசர மின்னஞ்சல் கடிதம் அனுப்பி, இளங்கோவன் உடலைக் கொண்டு வர உதவுமாறு வேண்டினார்.

ஓமனில் உள்ள மதிமுக தொண்டர்களையும் தொடர்புகொண்டு, தக்க ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ளக் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் இறந்தவரது குடும்பத்தினருடன் செல்பேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தார்.

மேற்கொள்ளப்பட்ட துரித முயற்சியின் விளைவாக, இளங்கோவன் உடல் இன்று மாலை ஓமன் சலாலாவிலிருந்து, கேரள மாநிலம் கோழிக்கோடு வந்தடைகிறது. உறவினர்கள் உடலைப் பெறச் சென்றுள்ளனர்".

இவ்வாறு மதிமுக தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT