தமிழகம்

சாரல் சீஸன் தொடங்கினாலும் குற்றாலம் அருவியில் குளிக்க தடை தொடரும்: தென்காசி ஆட்சியர் அறிவிப்பு

த.அசோக் குமார்

குற்றாலத்தில் சாரல் சீஸன் விரைவில் தொடங்க உள்ளது. சாரல் சீஸன் தொடங்கினாலும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் வரை குற்றாலத்துக்கு சுற்றுலாப் பயணிகள் வர விதிக்கப்பட்ட தடை தொடரும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், கிருஷ்ணாபுரத்தில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் பெரியகுளத்தை ரூ.30 லட்சம் மதிப்பில் சீரமைக்கும் பணியை ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் இன்று தொடங்கிவைத்தார்.

கரையை பலப்படுத்துதல், தடுப்புச்சுவர், வரத்துக்கால்வாயை சீரமைத்து மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும், குடிமராமத்து பணிகள் குறித்து விவசாயிகளுக்கான வழிகாட்டுதல் கையேட்டை வெளியிட்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறும்போது, “தென்காசி மாவட்டத்தில் நடப்பாண்டில் குடிமராமத்து பணிகளுக்கு அரசு சுமார் 10 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

இதன் மூலம் சிற்றாறு மற்றும் மேல்வைப்பாறு வடிநிலப் பகுதிகளில் 35 பணிகள் மேற்கொள்ளப்படும். இந்தப் பணிகள் அனைத்தும் 10 சதவீத விவசாயிகளின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.

இதில் குளம் , கால்வாய்களின் கரைகள் பலப்படுத்துதல், தடுப்புச்சுவர், வரத்துக்கால்வாய் சீரமைக்கப்பட்டு மேம்படுத்துதல், மதகுகள் சரிசெய்தல், மடைகள் பராமரிப்பு ஆகிய பணிகள் செய்யப்படும்.

குற்றாலத்தில் சாரல் சீஸன் விரைவில் தொடங்க உள்ளது. சாரல் சீஸன் தொடங்கினாலும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் வரை குற்றாலத்துக்கு சுற்றுலாப் பயணிகள் வர விதிக்கப்பட்ட தடை தொடரும்” என்றார்.

SCROLL FOR NEXT