பெண்கள், குழந்தைகளுக்காக கோவையில் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும் முகக்கவசங்கள். 
தமிழகம்

குழந்தைகளுக்கான பிரத்யேக முகக்கவசத்தை தயாரித்துள்ள இளம் தொழில்முனைவோர்

ஆர்.கிருஷ்ணகுமார்

குழந்தைகள், பெண்களுக்கான பிரத்யேக முகக்கவசத்தை கோவையைச் சேர்ந்த இளம் தொழில்முனைவோர் உருவாக்கியுள்ளார்.

கோவையைச் சேர்ந்தவர் கோகுல் ஆனந்த். பி.எஸ்.ஜி. டெக் கல்லூரியில் டெக்ஸ்டைல் பட்டம் பயின்ற இவர், கடந்த 10 ஆண்டுகளாக பெங்களூரு, ஓசூரில் உள்ள ஜவுளி நிறுவனங்களில் பணியாற்றிய பின்னர், கோவையில் ஜவுளி நிறுவனம் நடத்தி வருகிறார்.

கரோனா வைரஸ் தொற்று பரவும் தற்போதைய சூழலில், 2-6 வயது வரையிலான குழந்தைகள் மற்றும் 6-11 வயதுள்ளவர்களுக்கென இரண்டு வகை முகக்கவசங்கள், 11-16 வரையிலான பதின்ம வயதினருக்கான முகக்கவசம் மற்றும் ஆண்கள், பெண்களுக்கு பிரத்யேக முகக்கவசங்களை உருவாக்கி வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, "மருத்துவ நிபுணர்கள் ஆலோசனைப்படி, இரண்டு அடுக்கில் பருத்தி துணியும், ஓர் அடுக்கில் 'நான் வோவன் மெட்டீரியல்' எனப்படும் நெய்யப்படாத பொருளும் கொண்டு, மூன்று அடுக்கு முகக்கவசம் தயாரிக்கிறேன்.குழந்தைகளை ஈர்க்கும் வகையில், மிக்கி மவுஸ், டொனால்ட் டக், டோரா, சோட்டா பீம் உள்ளிட்ட சுவாரஸ்யமான கார்ட்டூன் கதாபாத்திரங்களுடன் முகக்கவசம் தயாரிக்கிறேன்.

பாக்டீரியா தடுப்பு செயல்திறனுடன், மடிக்கக்கூடிய, எளிதில் சுவாசிக்கக்கூடிய, மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் தயாரிக்கப்படும் பருத்தி துணி முகக்கவசங்கள், மாசுக் கட்டுப்பாடு, மேலும் வெளிப்புற திரவங்களிலிருந்து பாதுகாக்கும் தன்மை கொண்டது. இவை மென்மையாகவும், நீட்டிக்கக்கூடியதாகவும், காதில் பொருத்தும் பேண்ட் மென்மையான நெகிழ்வுத் தன்மை கொண்டவையாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது" என்றார்.

SCROLL FOR NEXT