துணைநிலை ஆளுநர் கிரண்பேடி: கோப்புப்படம் 
தமிழகம்

புதுச்சேரியில் இன்றும் திறக்கப்படாத மதுக்கடைகள்: கிரண்பேடி- அமைச்சர் நமச்சிவாயம் சந்திப்பு; தொடர் இழுபறி

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் இன்றும் மதுக்கடைகள் திறக்கப்படாத சூழலில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அழைப்பின் பேரில் கலால்துறை அமைச்சர் நமச்சிவாயம் ராஜ்நிவாஸ் சென்று சந்தித்தார்.

கரோனா அச்சுறுத்ததால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் புதுச்சேரியில் கடந்த மார்ச் 23-ம் தேதி மதுக்கடைகள் மூடப்பட்டன. அதன்பிறகு மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. இந்த நிலையில், தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு மதுபானங்கள் கடத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுக்கும் விதமாக இரு மாநில போலீஸாரும் எல்லைகளில் சோதனையிட்டு மது பாட்டில்களைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், புதுச்சேரியில் கடந்த 18-ம் தேதி அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டது. மதுபானக் கடைகள் 19-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கோப்பினை ஆளுநர் திருப்பி அனுப்பிவிட்டார். மதுவுக்கு கரோனா வரி விதிக்காததால் திருப்பி அனுப்பியதாகக் கூறப்பட்டது. இதனால் ஒரே நாளில் அன்றைய தினமே 2-வது முறையாக மீண்டும் அமைச்சரவை கூடியது.

இந்தக் கூட்டத்தில் புதுவை, காரைக்காலில் 50 சதவீதமும், மாஹே, ஏனாமில் 75 சதவீதமும் மதுபானங்களுக்கு கரோனா வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, முதல்வர் நாராயணசாமி, மே 20-ம் தேதி மதுக்கடைகள் திறக்கப்படும் எனத் தெரிவித்தார்.

ஆனால், இது தொடர்பான கோப்பு மீண்டும் ஆளுநருக்கு 19-ம் தேதி இரவு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் இந்தக் கோப்பு தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை. இதனால் இன்று (மே 20) மதுக்கடைகளும் திறக்கப்படவில்லை

இந்த நிலையில் கலால் துறை அமைச்சர் நமச்சிவாயத்தை துணைநிலை ஆளுநர் அவசர அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பின் பேரில் ஆளுநர் மாளிகைக்கு அமைச்சர் நமச்சிவாயம்.சென்றார். அங்கு ஆளுநர் கிரண்பேடி, அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் தலைமைச் செயலர் அஸ்வினி குமார் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

அமைச்சர் நமச்சிவாயம்: கோப்புப்படம்

45 நிமிடம் நடைபெற்ற இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கலால் துறை அமைச்சர் நமச்சிவாயம், "புதுச்சேரியில் மதுபானக் கடைகள் திறப்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை. கடைகளைத் திறந்தால் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் வரக்கூடும். இதனால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆளுநர் சுட்டிக்காட்டி மக்களின் நலன் முக்கியம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

மாநில அரசின் வருவாயை அதிகரிப்பது குறித்தும் அவர் ஆலோசனை கூறியுள்ளார். இதுகுறித்து முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

மதுபானக் கடைகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு, "மதுக்கடைகள் திறப்பதில் காலதாமதம் ஏற்படாது" என அமைச்சர் பதிலளித்துப் புறப்பட்டார்.

SCROLL FOR NEXT