கரோனா ஊரடங்கு காரணமாக வேலையிழந்து தவிக்கும் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகை மாவட்டத்தில் நேற்று பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. நாகையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாசனத்துக்காக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ள நிலையில், தண்ணீர் கடைமடை வரை சென்றடையுமா என்பது சந்தேகமாக உள்ளது. தண்ணீர் திறப்புக்கு இன்னும் 20 நாட்களே உள்ளன. இந்த நேரத்தில் குடிமராமத்துப் பணி, தூர் வாரும் பணிகளை எப்படி முடிக்க முடியும்? குடிமராமத்துப் பணிக்கு ஒதுக்கீடு செய்த தொகையை ஆளும் கட்சியினர் பங்கீடு செய்து கொள்ளாமல் பணிகளை முடிக்க வேண்டும் என்றார்.
அதே கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் 100 இடங்களிலும், பெரம்பலூர் மாவட்டத்தில் 25 இடங்களிலும், அரியலூர் மாவட்டம் கோவிலூரிலும் மற்றும் காரைக்காலிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.