வாணியம்பாடியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 21 கிலோ கஞ்சா, ரூ.20 லட்சம் ரொக்கத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நேதாஜி நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (44). இவரதுமனைவி மகேஸ்வரி (40). இவர்கள் கள்ளச்சாராயம் காய்ச்சிவிற்று வந்தனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட மகேஸ்வரி, சிலநாட்களுக்கு முன்பு விடுதலை ஆனார். அவர் மீண்டும் சாராய தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், அவரது கணவர் சீனிவாசன் கஞ்சா விற்பனை செய்து வருவதாகவும் திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி விஜயகுமாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து, வாணியம்பாடி தாலுகா காவல் ஆய்வாளர் கவிதா தலைமையில் தனிப்படையை அமைத்த எஸ்பி விஜயகுமார் சாராய வியாபாரி மகேஸ்வரியை கைது செய்ய உத்தரவிட்டார்.
அதன்பேரில், நேதாஜி நகரில் உள்ள மகேஸ்வரி வீட்டுக்கு சென்ற தனிப்படை போலீஸார் அங்கு நடத்திய சோதனையில் லாரி டியூப்களில் கள்ளச்சாராயம், கஞ்சா பொட்டலம், கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. அவற்றை தனிப்படை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பகுதியில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த மகேஸ்வரி உள்ளிட்ட 7 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்து அங்கிருந்த 3 இருசக்கர வாகனங்கள், மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராய பாக்கெட்கள், கஞ்சா பொட்டலங்கள், ரூ.20 லட்சம் ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய சீனிவாசனை பிடிக்க போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.