டாக்ஸி ஓடுவதற்கு ஏற்பாடு செய்தது போல் ஆட்டோக்கள் ஓடுவதற்கும் ஏற்பாடு செய்து ஆட்டோ ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா வைரஸின் தாக்கம் குறையாததால் 4-வது கட்டமாக ஊரடங்கை நீட்டித்துள்ளது மத்திய அரசு. உலகம் ஒரு குடும்பம் என்னும் உன்னத தத்துவத்தை அடைய உறுதுணையாக விளங்கும் போக்குவரத்துகளில், பயணிகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்துச் செல்லுதல்; அத்தியாவசியப் பொருட்களை அனைத்து பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லுதல் போன்ற அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் சாலைப் போக்குவரத்து மிகவும் இன்றியமையாததாக விளங்குகிறது.
இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த சாலைப் போக்குவரத்தில் அமைப்புசாரா ஓட்டுநர்களின் சேவை மகத்தானது. தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் ஆட்டோ உரிமையாளர்கள் லட்சக்கணக்கில் உள்ளார்கள். இந்த கரோனா வைரஸ் காலத்தில் அவர்களின் வாழ்வாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதை அரசு கருத்தில் கொண்டு டாக்ஸி ஓடுவதற்கு ஏற்பாடு செய்தது போல் ஆட்டோக்கள் ஓடுவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஓட்டுநர் மற்றும் அவரோடு பயனாளி ஒருவர் மட்டும் அனுமதித்து அவர்களுக்கு தினசரி வருமானம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மேலும் தமிழக அரசு ஆட்டோ ஓட்டுநர்கள் அமைப்புசாரா தொழிலாளர்களாக ஓட்டுநர் வாரியத்தில் பதிவு செய்ததாக 83 ஆயிரத்து 500 என்று கணக்கெடுத்துள்ளது. ஆட்டோ ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்'' என்று யுவராஜா தெரிவித்துள்ளார்.