தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கயத்தாறு அருகே தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் ஆத்திகுளம், கயத்தாறு பேரூராட்சி புதுக்கோட்டை, ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் கொத்தாளி ஆகிய தனிமைப்படுத்தப்பட்ட நோய் கட்டுப்பாட்டு பகுதியில் தொற்று நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நோய் கட்டுபாட்டு தடுப்புப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் காய்கறிகளை அந்த பகுதிகளிலே கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
மேலும், தன்னார்வலர்கள் மூலம் அத்தியாவசிய பொருட்களை அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். வீட்டில் இருந்து பொதுமக்கள் வெளி வரும்போது முககவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை மற்றும் அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
பின்னர் அவர் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்துக்கு குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலத்தில் இருந்து அதிகமான நபர்கள் தொடர்ந்து வந்து கொண்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் சோதனை சாவடியில் பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளபடுகிறது.
பின்னர் கரோனா தொற்று இல்லை என்ற நிலை ஏற்பட்டால் அவர்களை வீட்டுக்கு அனுப்பி அங்கேயே தனிமைப்படுத்தப்படுகின்றனர். அனுமதி பெறாமல் வாகனங்களில் ஏறி வரும் நபர்களை கண்டறிவதற்கு மாவட்டத்தில் பிரதான சாலைகள் மற்றும் குறுக்கு சாலைகளில் சோதனை சாவடி கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது, என்றார் அவர்.
ஆய்வின்போது கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா, கயத்தாறு வட்டாட்சியர் பாஸ்கரன், கயத்தாறு பேருராட்சி செயல் அலுவலர் ஜோதிபாசு மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.