தமிழகம்

சோதனைகள் குறைவாக எடுக்கப்படுவதாக ஸ்டாலின் கூறுவது தவறு: அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் 

செய்திப்பிரிவு

திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தில் கரோனா சோதனை குறைவாக எடுக்கப்படுவதாக கூறுவது தவறு. இந்தியாவிலேயே அதிக அளவில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட சோதனைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் கரோனா இன்றைய சோதனை முடிவுகளை வெளியிட்டு அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று கூறியதாவது:
“தற்போது விமானம், ரயில், பேருந்து மூலமாக வந்தவர்களுக்கும் கரோனா உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக சோதனைகள் எடுத்து வருகிறோம். திமுக தலைவா் ஸ்டாலின் சோதனைகள் குறைவாக எடுக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளாா். இது முற்றிலும் தவறான தகவல். இந்தியாவிலேயே அதிகமான கரோனா சோதனை நடத்தும் மாநிலமாக தமிழகம் உள்ளது. 3,37,841 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்தியாவிலேயே அதிக சோதனைகள் தமிழகத்தில் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 85 ஆயிரத்திற்கும் அதிகமான சோதனைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த 10 நாட்களில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 12 ஆயிரத்திற்கும் அதிகமான சோதனைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசு மருத்துவமனையில் 39 என்கிற அளவில் மாநில அளவில் அதிகபட்சமாக இந்தியாவிலேயே அதிக ஆய்வகங்கள் வைத்துள்ளோம். தனியார் சார்பில் 22 ஆய்வகங்கள் உள்ளன.

அரசு கரோனாவுக்கு எதிராக தொடர்ச்சியாகப் போராடிக்கொண்டிருக்கிறது. கிராமத்திலிருந்து நகரம் வரை அனைத்து அரசுத் துறைகளும் போராடிக் கொண்டிருக்கின்றன. ஒருவருக்கு நோய் குணமடைந்து வீடு திரும்பும்போது இரண்டு டெஸ்ட் எடுப்பது வழக்கம். தற்போது மத்திய அரசின் வழிகாட்டுதல்படி ஒரு டெஸ்ட் எடுக்கிறோம்.

அதேபோன்று வெளி மாநிலங்களிலிருந்து ஒருவர் வந்தால் அவருக்கு மட்டும் எடுத்தால் போதும். அவரது குடும்பம் இங்கிருப்பதால் டெஸ்ட் தேவையில்லை என்று எடுப்பதில்லை”.

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT