கே.பாலகிருஷ்ணன்: கோப்புப்படம் 
தமிழகம்

ஜோதிமணி எம்.பி.யை இழிவாகப் பேசிய கரு.நாகராஜன் மன்னிப்பு கோர வேண்டும்; மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

கரூர் எம்.பி. ஜோதிமணியை இழிவாகப் பேசிய பாஜகவின் மாநிலக் குழு செயலாளர் கரு.நாகராஜன் மன்னிப்பு கோர வேண்டும் என, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (மே 19) வெளியிட்ட அறிக்கை:

"நேற்று (மே 18) இரவு தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற ஒரு விவாதத்தில் காங்கிரஸ் கட்சியின் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியை பாஜகவின் சார்பில் விவாதத்தில் கலந்துகொண்ட கரு.நாகராஜன் தரம் தாழ்ந்தும். அநாகரிகமாகவும் விமர்சித்து தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு இதை வன்மையாக கண்டிக்கிறது.

ஜோதிமணி எம்.பி - கரு.நாகராஜன்

நியாயப்படுத்த முடியாத தங்கள் கட்சி மற்றும் ஆட்சியின் நிலைப்பாடுகளை நியாயப்படுத்த முனையும் பாஜக மற்றும் சங்பரிவார் ஆதரவாளர்கள் அதில் தோற்றுப் போகும்போது தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவதைத் தொடர்ச்சியாகப் பார்க்க முடிகிறது.

பாஜகவின் பெண்கள் குறித்த பார்வை, விவாதங்கள் குறித்தான அவர்களது அணுகுமுறை, ஜனநாயகம் பற்றிய அவர்களுடைய புரிதல் இவையெல்லாம்தான் இத்தகைய அவர்களின் அணுகுமுறைக்குக் காரணம்.

கரு.நாகராஜன் தன்னுடைய கருத்துக்குப் பகிரங்கமாக வருத்தமும் மன்னிப்பும் கோர வேண்டும்".

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT