தமிழகம்

கரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தெரு நாய்களுக்கு முதல் முறையாக ‘ஹோமியோபதி’ மருந்துகள் விநியோகம் 

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

பசி அனைத்து உயிரினங்களுக்கு பொதுவானது. இந்த ‘கரோனா’ காலத்தில் மனிதர்களே அன்றாடம் உணவுக்கு மிகுந்த சிரமப்படுகின்றனர்.

மனிதர்களை நம்பி வாழும் கால்நடைகள் சாப்பாடு கிடைக்காமல் பசியால் பல்வேறு உடல் தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில், அன்றாட வருமானத்திற்கு உதவும் மாடுகள், ஆடுகள் உள்ளிட்டவைகளுக்கு மனிதர்கள் சிரமப்பட்டு குறைந்தப்பட்ச உணவு, நீர் ஆகாரங்களை வழங்கிவிடுகின்றனர்.

ஆனால், நாய் உள்ளிட்ட மற்ற உயிரினங்கள் பாடு, இந்த ‘கரோனா’ காலத்தில் திண்டாட்டமாக உள்ளது. மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை, தன்னார்வலர்கள் உதவியுடன் பசியாலும், பட்டினியாலும் தவிக்கும் தெரு நாய்களுக்கு கால, மாலை இரு வேளைகளுக்கும் உணவு வழங்கி வருகிறது.

தற்போது இந்த தெரு நாய்களுக்கு போதிய உணவு ஆகாரம் கிடைக்காமல் பல நோய் தொந்தரவுகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக உணவுக்காக அவைகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு கொள்வதால் உடலில் சிராய்ப்புகள், புண் போன்றவை ஏற்பட்டுள்ளன. மேலும், தோல் நோய்களும் ஏற்பட்டு மிக கோரமாக சுற்றிதிரிந்து கொண்டிருக்கின்றன.

அதனால், மண்டல இணை இயக்குனர் சுரேஷ் கிறிஸ்டோபர் தலைமையில் கால்நடை மருத்துவர் எம்எஸ்.சரணவன்(உதவி இயக்குனர், கால்நடை நோய் புலனாய்வுப்பிரிவு), உதவி மருத்துவர்கள் ஏ.வி.ஜோசப் அய்யாத்துரை, சிவக்குமார், மெரில்ராஜ் உள்ளிட்ட குழுவினர்

மாவட்டம் முழுவதும் நோய் பாதிப்பால் சுற்றிதிரியும் தெரு நாய்களின் காயங்கள் குணமடைய அவைகளுக்கு வழங்கும் அன்றாடம் சாப்பாட்டுடன் ஹோமியோபதி மருந்துகள் வழங்குகின்றனர். தெருநாய்களுக்கு தற்போதுதான் முதல் முறையாக ‘ஹோமியோ பதி’ மருந்துகள் வழங்கப்படுவதாக கால்நடை மருத்துவர் கால்நடை நோய் புலனாய்வு உதவி இயக்குனர் எம்.எஸ்.சரவணன் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், ‘‘பொதுவாக தெருநாய்கள் மனிதர்கள் போடும் மிதமாகும் உணவுகளைதான் சாப்பிடுகின்றன. அதனால், சில சமயம் அந்த உணவு அதற்கு ஒத்துக் கொள்ளவில்லையென்றால் இயல்பாகவே தோல் வியாதி அதிகமாக வரும். வீட்டு நாய்கள் என்றால் மனிதர்கள் குளிப்பாட்டி சுகாதாரமாக வைத்துக் கொள்வார்கள்.

தெரு நாய்கள் அதுவாக தண்ணீரில் விழுந்தால் உண்டு. மழை வந்தால் நனைந்தால் உண்டு. அதனால், சில நேரங்களில் தெருநாய்களுக்கு தோல் உரிந்து கோரமாக காணப்படும். வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு, அதன் உரிமையாளர்கள் மருந்துகள் கொடுத்து குணப்படுத்துவார்கள். ஆனால், தெருநாய்களுக்கு அப்படி மருத்துவம் பார்ப்பதில்லை.

தற்போது ‘கரோனா’ காலம் என்பதால் தெரு நாய்களை பராமரிக்க வேண்டும் என்று கால்நடை பராமரிப்பு துறை உத்தரவிட்டுள்ளது. அதனால், தெரு நாய்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முதல் முறையாக ‘ஹோமியோபதி’ மருந்துகளை அதற்கு வழங்கும் சாப்பாட்டுடன் சேர்த்து வழங்கும் பணியை தொடங்கியுள்ளோம், ’’ என்றார்.

SCROLL FOR NEXT