தமிழகம்

மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்தத்தை தமிழக அரசு ஏற்கக்கூடாது: காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு வேண்டுகோள்

கரு.முத்து

விவசாயிகள், நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்துக்குக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு தமிழக விவசாயிகளையும் நெசவாளர்களையும் கடும் கோபத்துக்கு ஆளாகி இருக்கிறது.

இது தொடர்பாக மத்திய அரசு, தமிழக அரசுக்கு அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில், ‘’இலவச மின்சாரத்துக்காக மாநில அரசு ஒதுக்கும் மானியத்தை விவசாயிகள், நெசவாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடிப் பயன்மாற்ற திட்டத்தின் மூலம் செலுத்தலாம். ஆனால், இலவசமாக மின்சாரம் வழங்கக்கூடாது. அப்படி இல்லாமல் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படுமேயானால் மாநில அரசுக்கு மத்திய அரசு அதிக நிதி வழங்குவதற்காக இருக்கும் சலுகைகள் பெருமளவில் குறைக்கப்படும்’ என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் இந்த மின்சார சட்டத் திருத்தத்தை திரும்பப்பெற வேண்டும் என்று மத்திய அரசை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளார். தமிழகத்து எதிர்க்கட்சிகளும், விவசாயிகளும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

இதுகுறித்து காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வி. இளங்கீரன் கண்டன அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அது தொடர்பாக இந்து தமிழ் திசை இணையத்திடம் பேசிய அவர், “உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு தலைமையில் நடைபெற்ற போராட்டங்களில் பல விவசாயிகளின் உயிர்களைப் பலி கொடுத்து பெற்ற உரிமைதான் கட்டணமில்லா (இலவச) மின்சாரம். மத்திய அரசு விரைவில் கொண்டுவர உத்தேசித்திருக்கும் புதிய மின்சார திருத்தச் சட்டம் இந்த உரிமையை பறிக்க வகை செய்கிறது.

இந்தச் சட்ட வரைவு மாநில உரிமைகளுக்கு எதிரானது, தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவானது. மின் துறையில் வளர்ச்சியை ஊக்குவிக்கவே இந்தத் திருத்தங்களைக் கொண்டுவருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இந்தச் சட்டமே ஒரு சில தனியார் நிறுவனங்களுக்காக, குறிப்பாக சூரியசக்தி மின் உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் சில நிறுவனங்களுக்காகக் கொண்டுவரப்படுவதாகவே தெரிகிறது. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், மின் வாரியங்கள் கடுமையான இழப்பைச் சந்திக்கும் என்று வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

தனியார் மின் நிலையங்கள் லாபத்துடன் இயங்க வேண்டும். அதற்கு அவர்களிடமிருந்து மாநில மின்வாரியங்கள் மின்சாரத்தை வாங்க வேண்டும் என்று வலியுறுத்துவதே இந்தச் சட்டத்தின் நோக்கமாக தெரிகிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் படி மின்சாரம் பொதுப் பட்டியலில் வருகிறது. 2003-ம் ஆண்டு திருத்தப்பட்ட மின்சாரச் சட்டம் கொண்டு வரப் பட்டபோது, மின் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் மாநில அரசுகளிடமிருந்து பறிக்கப்பட்டு, ஒழுங்கு முறை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இப்போது இந்த ஒழுங்கு முறை ஆணையத்தின் தலைவர், உறுப்பினர்களையும் நேரடியாக மத்திய அரசே தேர்வுசெய்யும் வகையில் சட்டம் திருத்தப்படுவது கவலைக்குரியது; மாநிலங்களின் நலன்களுக்கு எதிரானது.

இந்த புதிய சட்டத்திருத்தத்தில் கவலைக்குரிய மற்றொரு விஷயம், மானியங்களைப் பணமாகக் கொடுக்க வேண்டும் என்று சொல்லியிருப்பது. இது பெரும் குழப்பத்தை உண்டாக்கும். ஏனென்றால், ஒரு நுகர்வோர் ஒவ்வொரு மாதமும் ஒரே மாதிரி மின்சாரத்தைப் பயன்படுத்துவதில்லை. ஒரு மாதம் 50 யூனிட்டுக்குக் குறைவாகப் பயன்படுத்துவார்கள். மற்றொரு மாதம், 800 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவார்கள். ஆகவே, ஒவ்வொரு மாதமும் இந்தத் தொகையைக் கணக்கிட்டு ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் எப்படிச் செலுத்த முடியும்.

சில இடங்களில் நான்கு வீடுகளை ஒரே நபர் வைத்திருப்பார். பணத்தை நேரடியாகக் கொடுத்தால் நான்கு வீடுகளுக்கான மின்சார மானியமும் ஒரே நபருக்கே போய்ச் சேரும். அதை பயன்படுத்துவோருக்கு வராது.

தவிர, தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளிக்கப்படுகிறது. இதற்குப் பதிலாக அவர்களை மின் கட்டணம் செலுத்தச் சொல்லிவிட்டு, பிறகு அவர்கள் வங்கிக் கணக்கிற்கு பணம் அளிக்கச் சொன்னால், அது நடக்காது. ஏற்கெனவே 2003-லேயே ஆண்டில் இதனை முயன்று பார்த்தார்கள். அப்போது தமிழ்நாட்டில் சுமார் 13 லட்சம் பம்ப் செட்கள் இருந்தன. இவர்களுக்கு மணியார்டர் மூலம் பணம் அனுப்பப்பட்டது. அதில் பாதி மணியார்டர்கள் திரும்பிவந்துவிட்டன. மீதமுள்ளவற்றிலும் பல யார் யாருக்கோ போய்ச் சேர்ந்தன. காரணம், தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாய பம்ப் செட்கள் இருக்கின்றன. இணைப்புகள் யார் பெயரிலோ இருக்கும். இப்போது அவருடைய சந்ததிகள் பயன்படுத்தி வருவார்கள். ஒரே பம்ப்செட்டை இரண்டு மூன்று பேர் பயன்படுத்துவார்கள். மானியத்தை நேரடியாக அளித்தால், யாருக்குக் கொடுப்பார்கள்?

எனவே, இந்தக் குழப்பங்களை தவிர்க்கவும், நெசவாளர்கள், விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் தொடரவும் இப்போது உள்ள நடைமுறையேயே மாநில அரசு தொடர வேண்டும் மத்திய அரசின் புதிய சட்ட திருத்தத்தை ஏற்கக்கூடாது.

இந்த விவகாரத்தில் விவசாயிகள், நெசவாளர்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் விதமாக பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியிருப்பதாகச் சொல்லி இருக்கிறார். அது மகிழ்ச்சி தான். ஆனால், கடிதம் எழுதுவது மட்டுமே இதற்கு தீர்வாகிவிடாது. ஏனென்றால், கடந்த காலங்களில் ‘நீட்’ உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு இதுபோல் கடிதம் எழுதி நாம் தோற்று நிற்கிறோம்; நமக்கான உரிமைகளை இழந்து நிற்கிறோம். இலவச மின்சார ரத்து விவகாரத்திலும் அதுபோன்ற நிலை ஏற்பட்டுவிடக் கூடாது.

எனவே, மத்திய அரசுக்கு கூடுதல் அழுத்தம் கொடுக்கும் விதமாக முதல்வர் அவர்கள் உடனடியாக பத்திரிகையாளர்களைச் சந்தித்து, ‘இந்த விவகாரத்தில் எக்காரணத்தை முன்னிட்டும் தமிழக விவசாயிகள், நெசவாளர்களின் உரிமைகளை நாங்கள் விட்டுத்தர மாட்டோம். இதில் அரசு விவசாயிகள், நெசவாளர்களின் பக்கம் நிற்கும்’ என்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் விவசாயிகள், நெசவாளர்கள் மத்தியில் இருக்கும் அச்சம் விலகும். விவசாயிகளின் வலிகளை உணர்ந்த உண்மையான விவசாயி ஒருவர் நமக்கு முதல்வராக இருக்கிறார் என்ற நம்பிக்கை தமிழக விவசாயிகள் மத்தியில் ஏற்படும்” என்றார்.

SCROLL FOR NEXT