மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்த தமிழர்கள் சிறப்பு ரயில் மூலம் தமிழகம் வந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ரத்தினகிரி, நாசிக், கோலாப்பூர், சத்தாரா, பூனா உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றி வந்த தமிழர்களை சொந்த ஊருக்கு அழைத்து வர கடந்த 17-ம் தேதி இரவு 10 மணிக்கு புறப்பட்ட சிறப்பு ரயில், இன்று (மே 19) காலை 7 மணிக்கு விழுப்புரம் வந்தடைந்தது.
தமிழகத்தில் உள்ள விழுப்புரம், திருப்பத்தூர், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 15 மாவட்டங்களைச் சேர்ந்த 322 தொழிலாளர்களை விழுப்புரம் ரயில் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் வரவேற்றனர். பின்னர், அவர்கள் கரோனா பரிசோதனை செய்த பின்பு பாதுகாப்புடன் அவர்களது சொந்த ஊருக்கு அரசு பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்களில் திருச்சியில் இறங்க வேண்டிய மயிலாடுதுறையைச் சேர்ந்த மணிராஜ் என்பவர் தவறுதலாக விழுப்புரத்தில் இறங்கிவிட்டார். அவரை கடலூர் மாவட்டத்திற்கு அனுப்பி அங்கிருந்து மயிலாடுதுறை அனுப்பி வைக்க மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொண்டது.
இதற்கிடையே நேற்று (மே 18) இரவு 10.30 மணிக்கு தஞ்சாவூரிலிருந்து உத்தரப்பிரதேசம் சென்ற சிறப்பு ரயிலில் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 258 பேரையும், கடலூர் மாவட்டத்தில் தங்கியிருந்த 507 தொழிலாளர்கள், புதுச்சேரியிலிருந்து 15 தொழிலாளர்கள் என 888 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்களை விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரை, எஸ்.பி.ஜெயக்குமார், கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், கோட்டாட்சியர் ராஜேந்திரன் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.