மதுரை மேலூர் அருகிலுள்ள தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அன்புநாதன்(30). திருமணம் ஆகாத இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த திருமணமான ஆயம்மாள் (28) என்ற பெண்ணுக்கும் பழக்கம் இருந்த நிலையில், 2 நாட்களுக்கு முன்பு இருவரும் மாயமாகினர். நேற்று முன்தினம் அதிகாலை மேலூர் - திருவாதவூர் சாலையில் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அவர்களை 3 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியது. மேலூர் போலீஸார் விசாரித்தனர்.
விசாரணையில், ஆயம்மாளின் அண்ணனான தமிழ்மாறன் (30), அவரது உறவினர்களான தெற்குத் தெருவைச் சேர்ந்த சதீஸ் குமார் (27), ராஜா (30) ஆகியோருக்கு, இந்த கொலையில் தொடர்புள்ளது தெரியவந்தது. 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். தமிழ் மாறன், மேலூர் ஊராட்சி ஒன்றிய 10-வது வார்டு திமுக கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமயநல்லூர் கட்டப்புளி நகரில் மதுரை எஸ்.எஸ். காலனியை சேர்ந்த மருத்துவக் காப்பீட்டுத் துறை ஊழியர் சிவக்குமார் (52) எரித்துக் கொல்லப்பட்டார். விசாரணையில், பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் கொலை நடந்தது தெரியவந்தது. இது தொடர்பாக திண்டுக்கல்லைச் சேர்ந்த கணேஷ்பாபு, மதுரை பெத்தானியாபுரம் விக்னேஷ் வாகித் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.