புதுச்சேரியில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் மதுக்கடைகளை திறப்பது தொடர்பாக முதல்வர் நாராயணசாமி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றோர். படம்: எம்.சாம்ராஜ் 
தமிழகம்

புதுச்சேரியிலும் ஊரடங்கு நீட்டிப்பு: ஆளுநர் ஒப்புதல் கிடைத்தவுடன் மதுக்கடை திறப்பு

செய்திப்பிரிவு

புதுச்சேரியிலும் ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.

புதுச்சேரியில் நேற்று முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் கூறியதாவது: மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவின் அடிப்படையில் புதுச்சேரியிலும் வரும் 31-ம் தேதி வரை ஊர டங்கை நீட்டிக்கிறோம். கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். தொழிற்சாலைகளும் அதே நேரம் செயல்படும். உள்ளூர் பேருந்து களை தனிமனித இடைவெளியுடன் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆட்டோக்களில் 2 பேர் மட்டுமே செல்ல வேண்டும். நான்கு சக்கர வாகனங்களில் 3 பேர் செல்லலாம். புதுச்சேரி எல்லைப் பகுதிகளில் டாக்சிகள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஓட்டல்களின் நேரமும் இரவு 7 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பார்சல் வாங்கிச் செல்லலாம். திருமண விழாக்களில் 50 பேர் கலந்துகொள்ளலாம். துக்க நிகழ்ச்சிகளில் 20 பேர் மட்டுமே பங்குபெற வேண்டும்.

வாகனங்கள் புதுச்சேரிக்குள் தாராளமாக செல்லலாம். புதுச்சேரி, காரைக்கால் இடையே பேருந்துகள் இயக்குவது தொடர்பாக தமிழக அரசுடன் பேசி, நடவடிக்கை எடுக்கப்படும்.

பெரிய மார்க்கெட்டில் உள்ள மீன் அங்காடியை திறக்க முடிவு செய்துள்ளோம்.

மின்சார விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைக்க வேண் டிய அவசியமில்லை. இதுசம்பந்தமாக மாநிலங்களை கலந்தா லோசிக்காமல் மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்று தெரி வித்தார்.

நாளை மதுக்கடை திறப்பு?

இதற்கிடையே, முதல்வர் நாராயணசாமி நேற்று இரவு செய்தியாளர்களிடம் கூறியதாவது: துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் வந்த உடன் மதுபானக் கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். பிற மாநிலங்களை போல் புதுச்சேரி மாநிலத்தில் மதுபானங்களுக்கு கோவிட் வரி விதிக்கப்பட்டுள்ளது.

மதுபானக்கடைகள் திறப்பதுமற்றும் கோவிட் வரி விதிக்கப்பட்டது தொடர்பாக துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் வந்த பிறகு நாளை (20-ம் தேதி) மதுக்கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, இன்று (19-ம் தேதி) மதுக்கடைகள் திறக்கப்படாது. இவ்வாறு முதல்வர் கூறினார்.

SCROLL FOR NEXT