குளிர்சாதன வசதிகொண்ட கடைகளில்கூட கரோனா தொற்றுப் பரவல் அச்சம் காரணமாக ஏசி அணைத்து வைக்கப்பட்டிருக்கும் சூழலில் பெரும்பாலான ஏடிஎம் மையங்களில் வழக்கம்போல் ஏசி இயங்குகிறது. இது கரோனா தொற்றுப் பரவலுக்கு வழிவகுக்குமோ என அச்சம் எழுந்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்று தும்மல், இருமலின்போது வெளிப்படுகையில் குளிர்சாதன வசதிகொண்ட இடங்களில் அது கூடுதல் நேரம் உயிருடன் இருப்பதாகவும், அதனால் அங்கு வரும் மற்றவருக்கும் பரவ வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே கடைகளில் ஏசியும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பல ஏடிஎம் மையங்களில் வழக்கம்போல் ஏசி இயங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் கரோனா பாதிக்கப்பட்டிருக்கும் நபர் பணம் எடுக்கவந்து தும்மவோ, இருமவோ செய்தால் அந்த வைரஸ் தொற்று குளிர்சாதன வசதிகொண்ட ஏடிஎம் மையங்களில் நீண்டநேரம் தங்கியிருக்கும். இதன்மூலம் அடுத்தடுத்து பணம் எடுக்க வருவோருக்கும் பரவும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை கொள்கின்றனர்.
இதுகுறித்து குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் ஜாக்சனிடம் கேட்டபோது, “இப்படியொரு ஆராய்ச்சியே தேவையற்றது. பொதுவாக எல்லாக் கிருமிகளுமே பரவக்கூடியதுதான். அந்த வகையில் நம்மைச் சுற்றி ஆயிரம் கிருமிகள் இருக்கிறது. மற்ற நோய்களோடு ஒப்பிடும்போது கரோனா பெரிய விஷயமும் இல்லை. கரோனாவுக்கு இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட வில்லை என்பதையே இப்போது விவாதிக்கிறோம். எந்த ஒரு வைரஸுக்கும் கொல்லப்பட்ட அதே நோய்க் கிருமிதான் தடுப்பு மருந்து. தடுப்பூசி சூட்சுமம் இதுதான். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் எய்ட்ஸ்க்கும், சமீபத்தில் மிரட்டிவரும் டெங்குக்கும் இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட வில்லை.
இந்த கரோனா வைரஸ் தொற்று, 30 விதமான வடிவம் எடுத்து வந்திருக்கிறது. இயல்பாகவே நாம் கிருமிகளோடுதான் வாழ்ந்துவருகிறோம். மனிதனின் வாய், கை இடுக்கு, குடல் என எல்லா இடத்திலும் கிருமி இருக்கும். எந்த மனிதனின் மலத்தை சோதித்தாலும் அமீபா இருக்கும். எந்த மனிதனின் சளியைச் சோதித்தாலும் ஏதாவது வைரஸ் இருக்கும். இயல்பாகவே குறைவான அளவு கரோனா வைரஸ் நம் உடலுக்குள் செல்வது நல்லதுதான். அப்போதுதான் அதை எதிர்த்துப் போராடும் சூழலுக்குள் உடல் பழகிக்கொள்ளும்.
அதேநேரம் நம்மைச்சுற்றி பலரும் தும்மவோ, இருமவோ செய்தால் அதிகளவு வைரஸ் தொற்றை உள்வாங்குவோம். அப்போதுதான் சிக்கல். ஆனால், இயல்பாகவே பலநூறு கிருமிகளோடு வாழ்வதைப் போல் கரோனாவோடும் வாழப்பழகுவதே இதில் இருந்து மனதளவில் மீள ஒரே வழி. முகக்கவசம், தனி மனித இடைவெளி இவைகளை கரோனா காலத்துக்குப் பின்னும் தொடர வேண்டும். ஏன் என்றால் எந்த ஒரு வைரஸ் தொற்றில் இருந்தும் தப்பிக்கொள்ள இதுதான் வழி. மற்றபடி ஏடிஎம் மிஷினில் இருந்து கரோனா வைரஸ் பிரத்யேகமாகப் பரவும் என அச்சப்படத் தேவையில்லை” என்றார்.
இதுகுறித்து வங்கித்துறை அதிகாரிகள் சிலரிடம் கேட்டபோது, “ஏடிஎம் மையத்தில் குளிர்சாதன வசதி செய்திருப்பது பணம் எடுக்க வருவோரின் வசதிக்கானது அல்ல. அப்படி ஏசி போடாவிட்டால் ஏடிஎம் இயந்திரம் சூடாகி, சேதமாகும் வாய்ப்பிருக்கிறது. அதனால்தான் கரோனா சூழலிலும் ஏசி போடுவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது” என்றனர்.