மாநில அரசு கூடுதலாக பெறும் கடன்களுக்கு தேவையற்ற நிபந்தனையை மத்திய அரசு விதிப்பது நியாயமற்றது என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 18) பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம்:
"ஐந்து அம்ச நோக்கங்களுடன் பொருளாதார திட்டத்தை அறிவித்ததற்காக பிரதமர் மோடிக்கும் இந்திய அரசுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இது, இந்திய பொருளாதாரத்தை புதுப்பிக்க உதவும் என நம்புகிறேன்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் தொற்றுநோய் மையங்கள், பொது சுகாதார ஆய்வகங்கள் அமைத்தல் ஆகியவற்றுக்காக கூடுதல் நிதி ஒதுக்கியது குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளாகும்.
பல்வேறு துறைகளுக்கும் நிதி நிலைத்தன்மையை வழங்கும் இந்த முயற்சியை வரவேற்கும் அதே வேளையில், மத்திய நிதி அமைச்சகத்தின் மே 17, 2020 தேதியிட்ட கடிதத்தில், மாநில அரசுகள் கடன் வாங்கும் விவகாரத்தில் தேவையற்ற கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது குறித்து உங்கள் கவனத்திற்கு எடுத்து வர விரும்புகிறேன்.
கரோனா தொற்று அச்சத்தால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் வருமான இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு மொத்த உற்பத்தியில் மாநிலங்கள் கடன் வாங்கும் அளவை 3 சதவீதத்திலிருந்து அதிகரிக்க வேண்டும் என, மாநில அரசுகள் வலியுறுத்தின. இது, மாநில அரசின் கடன். அவை மாநிலங்களின் எதிர்கால வரி வருவாயிலிருந்து திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். இந்த கடன் மத்திய அரசு வழங்கும் மானியம் அல்ல. கூடுதலாக கடன் பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தேவையற்ற நிபந்தனைகள் நியாயமற்றது.
மாநிலங்களுக்கு அதிகப்படியான சிரமங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், ஒருமித்த கருத்து இன்னும் உருவாக்கப்படாத சூழலில், இத்தகைய சீர்திருத்தங்களை முன்வைப்பது, கூட்டாட்சி தத்துவத்திற்கு ஏற்புடையதல்ல.
இந்த சீர்திருத்தங்கள் மாநிலங்களுடன் விரிவாக விவாதிக்கப்பட வேண்டும். அரசியலமைப்பின் 293 (3)-வது பிரிவின் கீழ் மத்திய அரசின் அதிகாரத்தை நிபந்தனைகளுக்குட்பட்டு மாநிலங்கள் கூடுதல் கடன் வாங்க அனுமதிப்பது முன்னோடியில்லாதது.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில், கூடுதலாக கடன் வாங்குவதற்கு இந்திய அரசு கோரும் சீர்திருத்தத்தின் நான்கு முக்கிய துறைகளில், எந்தவொரு நிதியுதவியையும் எதிர்பார்க்காமல் மாநில அரசு ஏற்கெனவே சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அதில் குறிப்பாக மின் பகிர்வு சீர்திருத்தங்கள் உள்ளிட்டவை. இவை அரசியல் ரீதியாக முக்கியமானவை.
இந்த விவகாரங்கள் ஏற்கெனவே பிரதமரிடம் பல்வேறு சமயங்களில் எழுப்பப்பட்டுள்ளன. மின்சார சட்டத்திருத்தம் குறித்தும் ஏற்கெனவே நான் எழுப்பியுள்ளேன். விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் யோசனையை தமிழக அரசு கடுமையாக எதிர்த்துள்ளது. மின்சாரத்திற்கான மானியம் வழங்கும் முறையையும் மாநில அரசே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. மின் துறையில் கொண்டு வரப்பட உள்ள சீர்திருத்தங்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
கடன்களுக்குத் தேவையில்லாமல் கடுமையான நிபந்தனைகளை விதிப்பது மாநில அரசுகளின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும். இந்த நேரத்தில் மாநில அரசுகளின் சிரமங்களை புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன். தொடர்புடைய வழிகாட்டுதல்களில் தேவையான மாற்றங்களைச் செய்யுமாறு அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்"
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.