தமிழக அரசு அனுமதியுடன் அரசுஊழியர்கள், தனியார் நிறுவனங்களை சேர்ந்தவர்களுக்கு போதியஅளவில் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு வரும் 31-ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கரோனா பாதிப்பு இல்லாத இடங்களில் கட்டுமான பணிகள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள் குறைந்த அளவில் ஊழியர்களை கொண்டு இயங்கி வருகின்றன. அதேபோல், அரசுஅலுவலகங்களில் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு 50 சதவீத ஊழியர்களை கொண்டு இன்று (18-ம் தேதி) முதல் இயங்கவும் தமிழக அரசு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: சில நிறுவனங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் போதிய அளவில் வாகன வசதி இல்லை. மேலும், தொழிலாளர்கள், ஊழியர்கள் வந்து செல்ல சமூக இடைவெளியை கடைபிடிக்க பேருந்துவசதி இருந்தால் சிறப்பாக இருக்கும் என கருதுகின்றனர். எனவே, நிறுவனங்களில் நிர்வாகிகள் சிலர்மாவட்ட தொழில்துறை இயக்குநரக அலுவலகம் மற்றும் அரசுபோக்குவரத்து கழக அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு ஒப்பந்த அடிப்படையில் அரசு பேருந்துகளை இயக்க வேண்மென கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல், சில ஐடி நிறுவனங்களும் விருப்பம் தெரிவித்துள்ளன.
எனவே, தமிழக அரசின் அனுமதியுடன் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறோம். அரசு ஊழியர்களுக்கும் சம்பந்தப்பட்ட துறைகள் சார்பில் வழங்கப்படும் அரசின் அனுமதியை கொண்டு போதிய அளவில் பேருந்துகளை இயக்க தயாராகவுள்ளோம். ஒவ்வொரு பேருந்துகளிலும் அதிகபட்சமாக 30 பேரை மட்டுமே அழைத்துச் செல்வோம்.
ஓட்டுநர், நடத்துநர்களுக்கு முகக்கவசம், கையுறை, சானிடைசர் ஆகியவை வழங்குவது, சமூகஇடைவெளியை கட்டாயம் கடைபிடிப்பது, ஒவ்வொரு பயணத்தின் முடிவிலும் பேருந்துகள் முழுமையாக கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்திட வேண்டும், முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பேருந்தில் பயணிக்க அனுமதி போன்ற அரசு வகுத்துள்ள வழிமுறைகளை பின்பற்றுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.