தமிழகம்

பழங்குடியினர் வங்கி கணக்கில் பல லட்ச ரூபாய் மோசடி நடந்ததாக புகார்

செய்திப்பிரிவு

செங்கல்பட்டு அருகே சென்னேரி கிராமம் உள்ளது. இங்கு உள்ள பெரிய புத்தேரி பகுதியில் 89 பழங்குடி இன குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக இவர்களில் சிலருக்கு பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் பேசுவதாக அழைப்பு வந்துள்ளது. அதில் பழங்குடியின மக்களுக்கு பிரதமர் கரோனா நிவாரண தொகையாக ரூ.5 ஆயிரத்தை வங்கிக் கணக்கில் செலுத்தப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பலரும் வங்கிக் கணக்கு எண்ணை கொடுத்துள்ளனர். இவர்களில் சுமார் 49 பேரின் கணக்கில் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக அவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள் தங்களுக்கு வந்த செல்போன் எண்ணை பலமுறை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், பதில் இல்லை. இதைத் தொடர்ந்து மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி செங்கல்பட்டு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT