வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர் செல்ல, ரயில் பயணக் கட்டணத்து ரூ.1 கோடி வழங்கப்படும் என வங்கி ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:
நாடுமுழுவதும் 8 கோடி தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். தற்போது கரோனா ஊரடங்கால் அவர்கள் வேலைவாய்ப்பை முற்றிலும் இழந்து, உணவின்றி தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், தங்களது சொந்தஊர்களுக்குத் திரும்ப விரும்புகின்றனர். ஆனால், போக்குவரத்து வசதி இல்லாததால், ஆயிரக்கணக்கான கி.மீ. கால்நடையாக நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர்களுக்காக சிறப்பு ரயில்களை ரயில்வே இயக்கி வருகிறது. இருப்பினும் அதற்கான கட்டணம் செலுத்த தொழிலாளர்களிடம் பணம் இல்லாததால் அவர்களால் அதில் பயணம் செய்ய இயலவில்லை.
எனவே, வெளிமாநிலத் தொழிலாளர்களின் ரயில் பயணக் கட்டண செலவை அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் ஏற்கமுடிவு செய்துள்ளது. இதற்காக, தனது பொது நிதியில் இருந்துரூ.1 கோடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தொகையை ஏற்குமாறு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுதி உள்ளோம். அவர் இதை ஏற்றுக் கொண்டால், உடனடியாக தொகை வழங்கப்படும்.