தென்கிழக்கு வங்கக் கடலில் உம்பன் புயல் உருவானதையடுத்து பாம்பன் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த வலுவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி கடந்த வெள்ளிக்கிழமை இரவு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. இது சனிக்கிழமை இரவு புயலாக உருவானது. இந்தப் புயல் வடமேற்கு திசை நோக்கி நகரும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. அதனையடுத்து நேற்று முன்தினம் பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
இப்புயல் திசை மாறி வடகிழக்கு திசையில் நகர்ந்து சென்று வரும் புதன்கிழமை மேற்கு வங்கம் அல்லது வங்கதேசம் ஒட்டிய பகுதியில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ‘உம்பன்’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாம்பன் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது மேலும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.