தமிழகம்

மும்பையில் இருந்து வருவோரால் தூத்துக்குடியில் கூடுதலாகும் கரோனா பாதிப்பு

ரெ.ஜாய்சன்

மும்பையில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு வந்த மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது. இதனால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 58 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். 28 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பிவிட்டனர்.

இந்நிலையில் இன்று மும்பையில் இருந்து வந்த மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த 5 பெண்கள் உள்ளிட்ட 8 பேருக்கும், வல்லநாடு பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 9 பேரும் மும்பையில் இருந்து வந்தவர்கள்.

இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்துக்கு மும்பையில் இருந்து வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக மும்பை தாராவி பகுதியில் இருந்து தினமும் பலர் குடும்பத்தோடு கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்த வண்ணம் உள்ளனர். இவ்வாறு வருவோரில் பலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இதனால், தூத்துக்குடியில் உள்ள கிராம மக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்பட்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT