தமிழகம்

சிறிய மாநிலமான புதுச்சேரியில் 16 ஐஏஎஸ், 6 ஐபிஎஸ் அதிகாரிகள்; எண்ணிக்கையை குறைத்தாலே பல கோடி மிச்சமாகும்- யோசனை தெரிவிக்கும் அரசு ஊழியர்கள்

செ.ஞானபிரகாஷ்

சிறிய மாநிலமான புதுச்சேரிக்கு 16 ஐஏஎஸ், 6 ஐபிஎஸ் அதிகாரிகள் என இத்தனை பேர் பணிக்கு தேவையா என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த எண்ணிக்கையை குறைத்தாலே புதுச்சேரிக்கு பல கோடி செலவு குறையும் என்று அமைச்சக ஊழியர்கள் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

புதுச்சேரியில் 14 லட்சம் மக்கள் தொகை உள்ளது. இங்கு காலிபணியிடங்கள், அரசு சார்பு நிறுவனங்கள் நீங்கலாக சுமார் 15 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணியில் உள்ளனர். கரோனா அச்சுறுத்தலால் வருவாய் குறைந்து அரசு ஊழியர்களின் ஊதியம் குறைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

இதுதொடர்பாக புதுச்சேரி ஒருங்கிணைந்த அமைச்சக ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலர் ராஜேந்திரன் கூறியதாவது:
அரசு ஊழியர்களின் ஊதியம் குறைப்பால் பணப்புழக்கம் குறையும். அமைப்பு சாரா பணியில் உள்ளோருக்கும் பணிவாய்ப்பு இழப்பு ஏற்படும். தொழிற்சாலைகள் முடக்கத்தில் இருக்கும்போதே ஊதியம் முழுமையாக தர தொழிலாளர்துறை சுற்றறிக்கை அனுப்பியது. அதை புதுச்சேரி அரசும் பின்பற்றவேண்டும்.

வருவாய் குறைவை ஈடுகட்ட பல வழிகள் உள்ளன. ஊதியகுறைப்பு சரியான வழியல்ல. வீண்செலவுகளை குறைத்தாலே பல கோடி மிச்சமாகும்.

அரசு வாகனங்களுக்கான எரிபொருள் நிரப்புவதில் கட்டுப்பாடு இல்லை. ஏராளமான அரசு வாகனங்கள் வெளியிலிருந்தும் பயன்பாட்டுக்கு வைக்கப்படுகிறது. வாகனம் ஒன்றுக்கு ரூ. 45 ஆயிரம் வீதம் அரசு செலவு செய்கிறது. இதில் பலகோடி செலவாகிறது. இச்சிறிய மாநிலத்துக்கு இவ்வளவு வாகனங்கள், எரிபொருள் தேவையா?

சிறிய மாநிலமான புதுச்சேரியில் 16 ஐஏஎஸ், 6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியில் உள்ளனர். இவர்களுக்கு ஊதியம், இதர செலவுகள், டெல்லி சென்று வரும் பயண செலவு என ஆண்டுக்கு பல கோடி செலவாகிறது. சிறிய மாநிலமான புதுச்சேரிக்கு இத்தனை பேர் தேவையா- அதை குறைத்தாலே பல கோடி செலவு குறையும்.

பொதுப்பணித்துறையில் பம்ப் ஹவுஸ், மேனிலை நீர் தேக்கத்தொட்டிகளுக்கு மின் உபயோகம் சரியாக கையாளப்படாததால் பல கோடி அபராதமாக செலுத்தி வீண் விரயம் செய்யப்படுகிறது. மின்துறை அறிவுறுத்தப்படி பொதுப்பணித்துறை திட்டப்பணிகள் நடக்காததால் பல கோடி வீண் விரயம் ஏற்படுவதாக தணிக்கைக்குழு தெரிவித்துள்ளது.

அதேபோல் சாராயக்கடை ஏலம் விடுவது போல் மதுக்கடைகளை ஏலம் விடுதல், தட்கல் சர்வீஸை போக்குவரத்து, மின்சாரம், தொழில்துறையில் அமல்படுத்தினால் பல கோடி வருவாய் கிடைக்கும். நிதிப்பற்றாக்குறைய சமாளிக்க அரசு ஊழியர் சம்பளத்தில் கைவைப்பது சரியானதல்ல.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT