புதுச்சேரி மாநிலத்தில் இருந்து பீகார், உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 1,168 பேர் சிறப்பு ரயில் மூலம் அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கரோனா வைரசின் தாக்கம் குறையாததால் 4 வது கட்டமாக ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் வேலை, கல்வி, சுற்றுலா உள்ளிட்ட காரணங்களுக்காக ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு புலம்பெயர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் மாநிலத்துக்கு செல்லலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. புதுச்சேரி அரசும் தனியாக http://welcomeback.py.gov.in இணையதளம் தொடங்கி அவர்களை அனுப்பி வைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. மேலும் இதுவரை கல்வி, வேலை, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக புதுச்சேரியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு சென்று கரோனா ஊரடங்கால் சிக்கி தவித்து வந்த புதுச்சேரியை சேர்ந்த 107 பேரை மாநில அரசு புதுச்சேரிக்கு கொண்டுவந்துள்ளது.
அதேபோல் புதுச்சேரியில் இருந்த 424 பேர் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் இயங்கும் தொழிற்சாலைகளில் உள்ளூர் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த பல ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கரோனா ஊரடங்கினால், தொழிற்சாலைகள் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளது.
மேலும் ஒரு சில தொழிற்சாலைகளில் குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்களை கொண்டு இயங்கி வருகின்றன. இதானல் இங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். இதுகுறித்து அவர்கள் மாநில அரசிடம் முறையிட்டனர்.
இதனையடுத்து வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்ப புதுச்சேரி அரசு ஏற்பாடு செய்தது. அதன்படி இன்று(மே 17) அதிகாலை புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து விழுப்புரம், சென்னை வழியாக பீகார் மற்றும் உத்தரபிரதேசம் மாநிலத்துக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில், வெளிமாநில தொழிலாளர்கள் 1,168 பேர் புறப்பட்டு சென்றனர்.
அவர்களை புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து முதல்வர் நாராயணசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் அருண் ஆகியோர் கொடியசைத்து வழியனுப்பி வைத்தனர். முன்னதாக புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இருந்து அனைவரையும் மாவட்ட நிர்வாகம் அரசு பேருந்து மூலம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்துக்கு அழைத்து வந்து மருத்துவ பரிசோதனை செய்தது.
இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து குறிப்பாக காரைக்கால் மாஹே, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் இருந்து வெளிநாடு சென்றவர்கள் சொந்த ஊர் வர முதல்வர் நாராயணசாயிடம் கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் முதல்வர் நாராயணசாமி இன்று அவர்களிடம் வீடியோ கான்பரன்சில் மூலம் உரையாடி விபரங்களை கேட்டறிந்தார். அவர்கள் தாயகம் திரும்புவதற்கான பணிகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.