மகாராஷ்ட்ராவிலிருந்து பள்ளபட்டி திரும்பிய 1 பெண் உள்ளிட்ட 16 பேருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்புடன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 42 பேர் குணமடைந்து கடந்த ஏப் 13ம் தேதி முதல் ஏப். 30ம் தேதி வரை வீடு திரும்பினர். இந்நிலையில் அன்றிரவே சென்னையை சேர்ந்த ஆம்புலன்ஸ் உதவியாளருக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டது. தொடர்ந்து சென்னை கோயம்பேட்டிலிருந்த ஒருவருக்கும், அதனை தொடர்ந்து மகாராஷ்ட்ராவிலிருந்து பள்ளபட்டி திரும்பிய ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானது.
இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனைகளில் மகாராஷ்ட்ராவிலிருந்து பள்ளபட்டி திரும்பிய 8 பேர், குளித்தலை திரும்பிய ஒருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களிலிருந்து கரூர் மாவட்டம் திரும்புபவர்களுக்கு நாள்தோறும் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகாராஷ்ட்ராவிலிருந்து பள்ளபட்டி திரும்பிய 1 பெண் உள்ளிட்ட 16 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இவர்கள் அனைவரும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஏற்கனவே கரோனா தொற்றுடன் 11 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. இதனால் ஆரஞ்சு மண்டலத்திலிருந்து கரூர் சிவப்பு மண்டலமாக மாறியுள்ளது. மகாராஷ்ட்ராவிலிருந்து பள்ளபட்டி திரும்பிய 24 பேருக்கு இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.