தமிழகம்

மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரம்: 6 மாணவிகள் உட்பட 15 பேர் சிறையில் அடைப்பு

செய்திப்பிரிவு

மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. சென்னை உட்பட பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் அடித்து உடைக்கப் பட்டன. சென்னையில் போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.

பூரண மதுவிலக்கை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த காந்தியவாதி சசிபெரு மாள், கடந்த 30-ம் தேதி கன்னி யாகுமரி மாவட்டத்தில் நடந்த போராட்டத்தின்போது மரணமடைந் தார். இதையடுத்து, மதுவுக்கு எதிராக பல்வேறு கட்சியினரும் அமைப்புகளும் போராட்டத்தில் குதித்தன. மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற போராட்டம் பெரும் மோதலாக மாறியது. டாஸ்மாக் கடை சூறையாடப் பட்டது. பொதுமக்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி, கண்ணீர் புகைகுண்டுகளை வீசியதால் பதற்றம் உருவானது.

இந்நிலையில், டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வலியு றுத்தி மாநிலத்தின் பல பகுதிகளில் நேற்று போராட்டம் தீவிரமடைந்தது.

சென்னை அமைந்தகரையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் இணைந்து மதுவிலக்கை அமல் படுத்தக் கோரி நேற்று போராட்டத் தில் ஈடுபட்டனர். 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஹாரிங்டன் சாலை செனாய் நகரில் இருந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர். சிலர், கடை மீது கற்களை வீசி தாக்கினர். மதுபாட்டில்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

அப்போது மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். போலீஸார் கடுமையாக தாக்கியதில் மாணவர்கள் பலர் பலத்த காயமடைந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்ற முயன்றனர். போலீஸாரின் பிடியில் இருந்து மாணவர்களை மீட்க போராடிய 6 மாணவிகள் ‘புத்தகத்தை படிக்கவா? சாராயத்தை குடிக்கவா?’ என்று முழக்கமிட்டனர். போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த மாணவிகள், காவல் துறையினரின் நடவடிக்கைகளைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் மீதும் போலீஸார் தடியடி நடத்தினர்.

15 பேர் சிறையில் அடைப்பு

போலீஸாரின் நடவடிக்கையை கண்டித்து முழக்கமிட்டுக் கொண்டி ருந்த மாணவி ஒருவர் மயங்கி விழுந்தார். அவரையும் பலவந்த மாக இழுத்து அப்புறப்படுத்தினர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 6 மாணவிகள் உள்பட 15 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கொலை மிரட்டல், பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உட்பட 9 பிரிவுகளில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைதான 15 பேரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநில தலைவர் செல்லபாண்டியன் தலைமையில் 3 பேர் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி சென்னை அண்ணா சாலை நந்தனம் சிக்னல் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட சத்யாக்கிரக போராட்டக்காரர்கள் அமைப்பினரும் தாம்பரம் பேருந்து நிலையம் அருகே உண்ணாவிரதம் இருந்த சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தினரும் கைது செய்யப்பட்டனர். சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் 15 பேர் தொடர் உண்ணாவிரதம் தொடங்கியுள்ளனர்.

சென்னை மட்டுமின்றி தமி ழகத்தின் பல பகுதிகளிலும் மதுவுக்கு எதிராக நேற்று போராட் டம் நடத்தப்பட்டது. மதுபானக் கடைகளை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, தூத்துக்குடி நகரில் 6 டாஸ்மாக் கடைகள் அடைக்கப் பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே தரடாப்பட்டு கிராமத்தில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை சாய்பாபா கோயில் அருகே இருந்த டாஸ்மாக் கடையை சிலர் அடித்து நொறுக்கினர். கடையில் இருந்த மதுபாட்டில் பெட்டிகளை வெளியில் எடுத்துப் போட்டு தீ வைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் குருபரப்பள்ளி கிராமம் அருகேயுள்ள டாஸ்மாக் மதுபானக் கடைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

இன்று முழு அடைப்பு

இதற்கிடையே, பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியு றுத்தி தமிழகத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெறு கிறது. மதிமுக, விடுதலைச் சிறுத் தைகள், மனிதநேய மக்கள் கட்சி அழைப்பு விடுத்துள்ள இந்தப் போராட்டத்துக்கு தேமுதிக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT