ஓசூர் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு சர்வதேச அரிமா சங்கம் வழங்கிய 100 பாதுகாப்பு கவச உடைகளை அரிமா சங்க மாவட்ட துணை ஆளுநர் ரவிவர்மா வழங்க இஎஸ்ஐ தலைமை மருத்துவர் கீதா பெற்றுக்கொண்டார். உடன் அரிமா சங்க நிர்வாகிகள். 
தமிழகம்

ஓசூர் இஎஸ்ஐ கரோனா தனி வார்டுக்கு 100 பாதுகாப்புக் கவச உடைகள்: சர்வதேச அரிமா சங்கம் நன்கொடை

ஜோதி ரவிசுகுமார்

ஓசூர் இஎஸ்ஐ மருத்துவமனை கரோனா தனி வார்டுக்குச் சர்வதேச அரிமா சங்கம் சார்பில் நன்கொடையாக வழங்கப்பட்ட பாதுகாப்புக் கவச உடைகள் அடங்கிய 100 பிபிஇ கிட்களை ஓசூரில் உள்ள அனைத்து அரிமா சங்கங்கள் இணைந்து வழங்க, இஎஸ்ஐ மருத்துவமனை தலைமை மருத்துவர் கீதா பெற்றுக்கொண்டார்.

ஓசூர் சிப்காட் - 1 மற்றும் சிப்காட் - 2 ஆகிய இரண்டு தொழிற்பேட்டைகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட பெரிய தொழிற்சாலைகள் மற்றும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தத் தொழிலாளர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்க ஓசூர் சிப்காட் - 1 பகுதியில் ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இஎஸ்ஐ மருத்துவமனை இயங்கி வருகிறது.

இந்த இஎஸ்ஐ மருத்துவமனையில் கரோனா அறிகுறி கண்டறியப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 50 படுக்கை வசதி கொண்ட தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு, கரோனா நோய்த்தொற்று உள்ள 21 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்குள்ள கரோனா தனி வார்டில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை மற்றும் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் தினசரிப் பயன்பாட்டுக்குத் தேவையான பாதுகாப்புக் கவச உடைகள் அடங்கிய 100 கிட்களை சர்வதேச அரிமா சங்கம் வழங்கியுள்ளது.

இந்த பிபிஇ கிட்களை ஓசூரில் உள்ள அனைத்து அரிமா சங்கங்கள் சார்பில் அரிமா சங்க மாவட்ட முதலாம் துணை ஆளுநர் டி.ரவிவர்மா தலைமையில் வழங்க இஎஸ்ஐ மருத்துவமனை தலைமை மருத்துவர் கீதா பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்வில் ஓசூர் அரிமா சங்கங்களின் நிர்வாகிகள் ஒய்.வி.எஸ்.ரெட்டி, சுவாமிநாதன், ரவிசங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து ஓசூர் இஎஸ்ஐ மருத்துவமனை தலைமை மருத்துவர் கீதா கூறியதாவது:

''இஎஸ்ஐ மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தனிவார்டில் பணியாற்றும் மருத்துவர், செவிலியர் பயன்பாட்டுக்கு 100 பாதுகாப்புக் கவச உடைகளை அரிமா சங்கத்தினர் வழங்கி உள்ளனர். இங்குள்ள 50 படுக்கை வசதியுள்ள கரோனா தனி வார்டில் கரோனா நோய்த் தொற்றுள்ள 21 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு சிகிச்சையளிக்க ஒரு ஷிப்ட்டுக்கு ஒரு மருத்துவர், இரண்டு செவிலியர்கள் மற்றும் இதர உதவியாளர்கள் என மொத்தம் 3 ஷிப்ட்டுகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

கரோனா தனி வார்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க அரசு அறிவித்துள்ள உணவுப் பட்டியலின்படி தினமும் மூன்று வேளையும் புரதச் சத்து நிறைந்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றுடன் காலையில் கபசுரக் குடிநீரும், மாலையில் நிலவேம்புக் குடிநீரும், தினமும் அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப ஏதாவது ஒரு பழமும், காலை மற்றும் இரவில் பால் மற்றும் மாலையில் சூப் ஆகியவை வழங்கப்படுகின்றன''.

இவ்வாறு தலைமை மருத்துவர் கீதா கூறினார்.

SCROLL FOR NEXT