பொதுமுடக்கத்திலிருந்து பல விஷயங்களுக்குத் தளர்வு அறிவிக்கப்பட்டாலும், ஆட்டோ, டாக்ஸிகள் ஓட அனுமதிப்பது குறித்து இன்னமும் அரசு முடிவெடுக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில், ஆட்டோக்கள் ஓட அனுமதிக்காவிட்டால் திங்கட்கிழமை முதல் தாங்களாகவே ஆட்டோக்களை ஓட்டப்போவதாகத் தெரிவித்துள்ளனர் கோவையில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள்.
கோவை மாவட்டத்தில் சுமார் 16 ஆயிரம் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் சுமார் 13 ஆயிரம் ஆட்டோக்கள் மாநகரில் ஓடுபவை. கரோனா பொதுமுடக்கம் அமலுக்கு வந்த பின்னர் ஆட்டோக்கள் இயக்கம் சுத்தமாக முடங்கிவிட்டது.
இதற்கிடையே ஆட்டோக்கள் ஒரே ஒரு பயணியை ஏற்றிச்செல்லலாம் என்ற அறிவிப்பு வெளியானது. அப்படியெல்லாம் ஒற்றைப் பயணியை வைத்து ஓட்டுவது நடைமுறைக்குச் சாத்தியமல்ல என்று ஆட்டோ ஓட்டுநர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆட்டோக்கள் இயங்கக் கூடாது என்ற அறிவிப்பே தொடர்ந்து நீடிப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால் இன்று வரை ஆட்டோக்கள் இயங்கவில்லை. அதையும் மீறி அவசரத் தேவைகளுக்காக ஆட்டோக்கள் இயங்கினால், போலீஸார் அபராதம் விதிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்தச் சூழ்நிலையில், ஆட்டோக்களை இயக்க அனுமதி கேட்டு இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியரையும், கோவை மாநகரக் காவல் துறை ஆணையரையும் சந்தித்துக் கோவை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் அனைத்து சங்கக் கூட்டுக் கமிட்டியினர் கோரிக்கை மனுவை அளித்தனர்.
அதில், ''கடந்த 2 மாதங்களாக ஆட்டோக்கள் ஓடாமல் ஆட்டோ தொழிலாளர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அரசு சில நூறு ஆட்டோ தொழிலாளர்களுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு பல்லாயிரக்கணக்கான ஆட்டோ தொழிலாளர்களைப் பட்டினி போட்டுள்ளது. தற்போது கோவை மாநகரில் அனைத்துக் கடைகளும் இயங்க அனுமதித்துள்ள அரசு, வரும் மே 18-ம் தேதி முதல் ஆட்டோக்களையும் இயக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மேலும், அத்தியாவசியத் தேவைகளுக்காக இயக்கப்படும் ஆட்டோக்களை வழிமறித்து, அபராதம் விதிப்பதைத் தடுத்து நிறுத்திடவும் கோருகிறோம்'' என்று குறிப்பிட்டிருந்தனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் அனைத்து சங்கக் கூட்டுக் கமிட்டித் தலைவர் பி.கே.சுகுமாரன் மற்றும் அதன் நிர்வாகிகளிடம் பேசினோம்.
“மக்களின் அவசரத் தேவைகளுக்கு ஆட்டோ என்பது அத்தியாவசியமான ஒன்றாகும். ஆனால், அதை அதிகாரிகள் பொருட்படுத்துவதே இல்லை. பிரசவம், உணவுப் பொருள் விநியோகம் போன்ற அத்தியாவசியப் பணிகளுக்காகச் செல்லும் ஆட்டோக்களைக்கூட நிறுத்தி, 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கிறார்கள். அதைக் கட்டச் சொல்லி சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் எண்ணுக்கு வாட்ஸ் அப் தகவல், எஸ்எம்எஸ் அனுப்புகிறார்கள். ஒரு ஓட்டுநருக்கு, 4 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகை என்று குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார்கள்.
இப்போது மாவட்ட ஆட்சியர், கமிஷனர் ஆகியோர் எங்கள் கோரிக்கையைப் பரிசீலிப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். திங்கட்கிழமை ஆட்டோக்கள் வழக்கம்போல ஓட ஏற்பாடு செய்து தருவதாக உத்தரவாதம் கொடுத்திருகிறார்கள். ஒருவேளை அப்படி நடக்கவில்லை என்றால் நாங்களே ஆட்டோவை இயக்குவது என்று முடிவு செய்துவிட்டோம். இரண்டு பயணிகளை ஏற்றிச்செல்லலாம் என்றும் முடிவெடுத்திருக்கிறோம். கரோனா பிரச்சினை புரிந்து கொள்ளக்கூடியதுதான். ஆனால் அதற்காக, எங்கள் குடும்பங்கள் பட்டினி கிடப்பதை எங்களால் எப்படி அனுமதிக்க முடியும்?” என்றார்கள் அவர்கள்.