துபாயிலிருந்து காரைக்காலுக்கு வந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா இன்று (மே 16) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"துபாயிலிருந்து கடந்த 13-ம் தேதி காரைக்கால் வந்த 26 வயதுப் பெண்ணுக்கு கரோனா தொற்று உள்ளதா எனக் கண்டறிய சளி, உமிழ் நீர் மாதிரிகள் கடந்த 14-ம் தேதி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
பரிசோதனை முடிவில் அவருக்கு கரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் நல்ல நிலையில் உள்ளார்.
அவரோடு தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. அவரது கணவரும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார்"
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா தெரிவித்தார்.
கணவன், மனைவி இருவருமே துபாயிலிருந்து வந்துள்ளனர். அப்பெண் தற்போது கருவுற்று இருக்கிறார் என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
காரைக்கால் மாவட்டத்தில் கரோனா தொற்று இல்லாத நிலையில் முதல் முறையாக கடந்த 10-ம் தேதி விசாரணைக் கைதி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து காரைக்கால் மாவட்டம் ஆரஞ்சு மண்டலமானது.
கடந்த 14-ம் தேதி வந்த பரிசோதனை முடிவில் அவருக்குத் தொற்று இல்லை என்பது தெரியவந்ததால் பச்சை மண்டலமானது. தற்போது பெண் ஒருவருக்குத் தொற்று உள்ள நிலையில் காரைக்கால் மாவட்டம் மீண்டும் ஆரஞ்சு மண்டலமாக மாறியுள்ளது.