காணொலிக் காட்சி வாயிலாக மாவட்டச் செயலாளர்களிடம் உரையாடும் ஸ்டாலின். 
தமிழகம்

காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஸ்டாலின் ஆலோசனை

செய்திப்பிரிவு

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக இன்று நடைபெற்றது.

கரோனா ஊரடங்கு காலத்தில் 'ஒன்றைணைவோம் வா' என்ற திட்டத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கினார். அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர், ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகின்றனர். இதற்கென உதவி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உதவி எண் மூலம் மக்கள் விடுக்கும் கோரிக்கைகளை தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் பணியிலும் திமுக ஈடுபட்டது.

அதன்படி, மக்களின் கோரிக்கைகள் அடங்கிய 1 லட்சம் மனுக்களை இரு தினங்களுக்கு முன்பு, நாடாளுமன்ற திமுக குழுத்தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான எம்.பி.க்கள் தலைமைச் செயலாளரிடம் வழங்கச் சென்றனர். அப்போது, கோரிக்கைகளுக்கு தலைமைச் செயலாளர் செவிசாய்க்காமல் தங்களை அவமானப்படுத்தியதாக திமுக எம்.பி.க்கள் குற்றம்சாட்டினர். இதற்கு தலைமைச் செயலாளர் சண்முகம் மறுப்பும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலிக் காட்சி மூலமாக மே 16-ம் தேதி நடைபெறும் என, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி, இன்று காலை, திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது.

காணொலி காட்சி வழியாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

அப்போது, கரோனா பேரிடர் காலத்தில் திமுகவினர் முன்னெடுத்து வரும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து மாவட்டச் செயலாளர்களிடம் திமுக தலைவர் விசாரித்தறிந்து, ஆலோசனைகள் வழங்கினார்.

SCROLL FOR NEXT