பள்ளி மாணவி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறும் முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி. 
தமிழகம்

கொல்லப்பட்ட மாணவி குடும்பத்திற்கு ஆறுதல்; 144 தடை உத்தரவை மீறியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதும் வழக்குப் பதிவு 

எஸ்.நீலவண்ணன்

விழுப்புரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், கூட்டம் கூடியதாக தமிழக பாஜக தலைவர் முருகன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

விழுப்புரம் அருகே சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். 10-ம் வகுப்பு படித்து வந்த அவருடைய மகள் கடந்த சில நாட்களுக்கு முன் எரித்துக் கொல்லப்பட்டார். இவ்வழக்கில் அதிமுகவைச் சேர்ந்த முருகன், கலியபெருமாள் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை வழக்கில் கைதான இருவரையும் அதிமுக அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கியது.

இந்நிலையில், ஜெயஸ்ரீயின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி நிதியுதவி வழங்க கூட்டமாக சென்றதாக தமிழக பாஜக தலைவர் முருகன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் மீதும், விசிக மாவட்ட செயலாளர் அறிவுக்கரசு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட செயலாளர் அமீர் அப்பாஸ், மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ் உள்ளிட்டோர் ஆர்பாட்டம் நடத்தியதாக திருவெண்ணை நல்லூர் போலீஸார் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தையும், 144 தடை உத்தரவையும் மீறியதாக கடந்த 14-ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், பள்ளி மாணவி உயிரிழந்த அன்றே முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட திமுகவினர் அங்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, முதல்கட்டமாக ரு.50 ஆயிரம் நிதி உதவி அளித்தனர். ஆனால் திமுகவினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்யவில்லை என்ற சர்ச்சை எழுந்தது.

இது குறித்து காவல்துறை வட்டாரங்களில் கேட்டபோது, "பொன்முடியுடன் 3 பேர் மட்டுமே சென்றதால் வழக்குப் பதிவு செய்யவில்லை. மற்றவர்கள் போலீஸாரின் எச்சரிக்கையை பொருட்படுத்தவில்லை அதனால் வழக்குப் பதிவு செய்தோம்.

ஆனால், இது அரசியல் ரீதியாக சர்ச்சையை எழுப்பியதால் பொன்முடி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.வி.சரவணன் உள்ளிட்டோர் மீதும் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தையும், 144 தடை உத்தரவையும் மீறியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது" என்றனர்.

SCROLL FOR NEXT