அம்மாவின் பிள்ளை வேஷம் போட்டுத் தப்பிக்க முடியாது என்று தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து கமல் விமர்சித்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தல் தீவிரமாகி வந்த சூழலில் மே 7-ம் தேதி மதுக்கடைகளைத் திறந்தது தமிழக அரசு. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த உயர் நீதிமன்றம் மே 17-ம் தேதி வரை மதுக்கடைகளைத் திறக்கத் தடை விதித்தும் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளை மூடும்படியும் உத்தரவிட்டது.
இந்நிலையில் மதுக்கடைகளை மூடும் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. அந்த மனுவின் மீது உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
இதையடுத்து நாளை (மே 16) மதுக்கடைகளைத் திறக்க அனைத்து ஏற்பாடுகளைச் செய்து வருகிறது தமிழக அரசு. இந்தத் தீர்ப்பு தொடர்பாக காலையில் தனது ட்விட்டர் பதிவில் தமிழக அரசைக் கடுமையாக விமர்சித்திருந்தார் கமல்.
தற்போது மீண்டும் மதுக்கடைகள் திறப்பு தொடர்பாக தமிழக அரசின் செயல் குறித்து கமல் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:
"மதுக்கடைகளை மூடியதற்கு தமிழகமெங்குமுள்ள தாய்க்குலம் வாழ்த்து சொன்னது. திறந்ததற்கான தீர்ப்பை அதே தாய்க்குலம் சொல்லும், மிக விரைவில். அப்போது நீங்கள் அம்மாவின் பிள்ளை வேஷம் போட்டுத் தப்பிக்க முடியாது."
இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.