காரைக்குடி மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், கூலித் தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அமராவதி புதூர் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து கூலித்தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், ஆதரவற்றோருக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
காரைக்குடி அமராவதி புதூரில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை 4-வது பட்டாலியன் பிரிவு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியபேதே, தங்களது வளாகத்தில் உள்ள 232 குடியிருப்புகளையும் கரோனா மருத்துவமனையாக மாற்றினர்.
தொடர்ந்து புலம்பெயர் தொழிலாளர்கள், ஆதரவற்றோர், சமீபத்தில் வெளி மாநிலங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட தமிழகத் தொழிலாளர்களுக்கு அரிசி, மளிகை, காய்கறிகளை வழங்கி வந்தனர்.
இன்று தேவகோட்டை அருகே கோட்டவயல், ஈகரை கிராமங்களில் வசிக்கும் 200 கூலித் தொழிலாளர்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினர். அவற்றை மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டர் கிளாரி, கோட்டாட்சியர் சுரேந்திரன் ஆகியோர் வழங்கினர்.
வட்டாட்சியர் மேசியாதாஸ், மத்திய தொழில் பாதுகாப்புப் படை பிரிவு ஆய்வாளர்கள் பிரின்ஸ் ரவிச்சந்திரன், முகேஷ்குமார், உதவி ஆய்வாளர்கள் குழந்தைவேலு, தனபால், காளிதாசன், பாண்டியன், வருவாய் ஆய்வாளர் மாரியப்பன், கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார், ஊராட்சித் தலைவர் பாரதமாலா மணிமாறன், துணைத் தலைவர் ஈகரை செல்வம் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.